" “Practice kindness all day to everybody and you will realize you’re already in heaven now.” – Jack Kerouac"

3 ஆண்டு ஆட்சி பற்றிய விமர்சனங்களால் குறைகளை சீர்செய்யும் வாய்ப்பு வானொலியில் பிரதமர் மோடி பேச்சு

Views - 62     Likes - 0     Liked


 • தனது 3 ஆண்டு ஆட்சி பற்றிய விமர்சனங்களால் குறைகளை சீர் செய்யும் வாய்ப்பு ஏற்படுகிறது என்று பிரதமர் மோடி வானொலி உரையில் குறிப்பிட்டார்.

  பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் ‘மன் கீ பாத்’ (மனதில் இருந்து பேசுகிறேன்) என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றுவதை வழக்கமாக கொண்டு உள்ளார். நேற்று அவர் பேசியதாவது:–

  புனித தலம்

  இன்று(நேற்று) வீர சாவர்கரின் பிறந்தநாள். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் அந்தமான் நிகோபாரில் இருக்கும் செல்லுலார் சிறைச்சாலையை பார்க்க சென்றிருந்தேன். அந்த சிறையில்தான் வீர சாவர்கர் ‘மாஜு ஜன்மடே’ என்னும் ஒரு புத்தகத்தை எழுதினார். அதை படித்த பிறகுதான் அந்த சிறையை காணவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு பிறந்தது.

  விடுதலை வேட்கை கொண்டவர்கள் என்னென்ன கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதை நீங்கள் அந்த தனிமைச் சிறைக்கு சென்று பாருங்கள். அதை ஏன் கொடுஞ்சிறை என்று அழைக்கிறார்கள் என்பது அப்போது உங்களுக்கு தெரியும். அது ஒருவகையில் சுதந்திர போராட்டத்தின் புனித தலம்.

  இயற்கையோடு இணைவோம்

  ஜூன் 5–ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் ஆகும். இந்த ஆண்டு ஐ.நா.சபை, இயற்கையோடு மக்களை இணைப்போம் என்பதை மையக்கருத்தாக அறிவித்து இருக்கிறது. இயற்கையோடு இணைப்பை ஏற்படுத்துவது என்றால் சிறப்பான பூமியை உருவாக்குவது. இதைத்தான் காந்தியடிகள், நம்மால் காண இயலாத உலகை பற்றி அக்கறை காட்டுவது. அதனுடன் கரிசனத்துடன் இருப்பது நமது கடமை என்றார்.

  ஜூன் 5–ந் தேதி இயற்கையோடு இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளும் உலகம் தழுவிய இயக்கம் என்பது நம்மோடு நாம் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் இயக்கமாக ஆகவேண்டும்.

  அன்றைய தினம், மத்திய அரசு மாநில அரசுகளின் துணையுடன் கழிவுப் பொருள் மேலாண்மை தொடர்பான ஒரு மிகப்பெரிய இயக்கத்தை நடத்த முடிவுசெய்து இருக்கிறது. நாட்டின் சுமார் 4 ஆயிரம் நகரங்களில் திடக்கழிவு, திரவக்கழிவு ஆகியவற்றை சேகரிக்க தேவையான குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட இருக்கின்றன. இதற்காக பச்சை மற்றும் நீல நிறத்தில் குப்பைத் தொட்டிகள் அளிக்கப்படும். திரவக் கழிவு பொருட்களை பச்சை நிற குப்பைத் தொட்டியிலும், திடக் கழிவுகளை நீல நிறத் தொட்டிகளிலும் போடவேண்டும். தூய்மையை நோக்கி ஒவ்வொரு முறையும் நாம் ஒரு புதிய அடியை எடுத்து வைக்கவேண்டும்.

  அனைத்து மாநிலங்களிலும் மழை வந்த உடனேயே மரம் நடுதல் என்னும் பெரிய இயக்கம் தொடங்கி விடுகிறது. இந்த மழைக்காலத்தில் மரம் நடுதலுக்கு அதிக முக்கியத்துவமும், பங்களிப்பும் தரவேண்டும்.

  3 தலைமுறையினர் யோகா

  ஜூன் 21–ந் தேதி சர்வதேச யோகா தினம் ஆகும். இந்த நாள் தற்போது உலகம் முழுவதும் நன்கு அடையாளம் தெரிந்து கொள்ளும் நாளாகி இருக்கிறது. உலகிற்கு பாரதம் அளித்திருக்கும் மிகப்பெரிய கொடை யோகக்கலை ஆகும். இதன் வாயிலாக நம்மால் உலகை ஒன்றாக இணைக்க முடியும். உடல் நலன், உடல் உறுதி ஆகிய இரண்டுக்கும் உத்தரவாதம் அளிக்கும் அரிய மருந்து யோகக்கலை.

  3–வது சர்வதேச யோகா தினத்தையொட்டி ஒரு குடும்பத்தின் 3 தலைமுறையினர் இணைந்து ஒன்றாக யோகா பயிற்சி மேற்கொள்ளலாமே என்று எனக்கு யோசனை தெரிவிக்கப்பட்டது. தாத்தா– பாட்டி, அப்பா–அம்மா, மகன்–மகள் என 3 தலைமுறையினர் ஒன்றாக சேர்ந்து யோகா பயிற்சி மேற்கொண்டு அதை புகைப்படமாக எடுத்து எனக்கு ‘நரேந்திர மோடி ஆப்’ என்னும் செயலியில் அனுப்பி வையுங்கள். அது நேற்று, இன்று, நாளையின் படமாக அமையும்.

  ஜூன் 1–ந் தேதி முதலே நான் டுவிட்டரில் தினமும் யோகக்கலை தொடர்பான செய்திகள் எதையாவது வெளியிட்டுக் கொண்டே இருப்பேன். இது ஜூன் 21–ந் தேதி வரை தொடரும். நீங்கள் அனுப்புவதையும் பகிர்ந்து கொள்வேன். ஒருவகையில் இதுவும் வரும் முன் காக்கும் சுகாதார பாதுகாப்பு இயக்கம்தான்.

  குறைகளை சீர்செய்ய வாய்ப்பு

  கடந்த 2 வாரங்களாக நடப்பு அரசின்(மோடி அரசு) 3 ஆண்டுகால செயல்பாடுகள் பற்றிய கட்டுரைகள், விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. ஏகப்பட்ட ஆய்வுகள், கருத்து கணிப்புகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன. இவற்றையெல்லாம் மிகவும் ஆரோக்கியமான அறிகுறிகளாகவே பார்க்கிறேன்.

  கடந்த 3 ஆண்டுகளும் ஒவ்வொரு உரைகல்லிலும் ஆட்சி உரைத்து பார்க்கப்பட்டது. மக்களாட்சி முறையில் இது சிறப்பான செயல்பாடு ஆகும். மக்களாட்சியில் அரசுகள் பதில் கடமைப்பட்டவர்கள் என்பது என் தெளிவான ஆணித்தரமான கருத்து.

  என்னென்ன குற்றம் குறைகள் இருக்கின்றனவோ, அவை வெளிப்படுத்தப்படும் போதுதான் அதை சீர்செய்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. செயல்பாடு நன்றாக இருக்கலாம், குறைவான பயன்களை தரலாம். மோசமாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் அவற்றில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இதன் வாயிலாகத்தான் முன்னேற்றம் காண முடியும். எனவே இந்த அலசலும் ஆராய்ச்சியும் மிகவும் அவசியமான ஒன்று.

  இவ்வாறு அவர் பேசினார்.

  அமித் ஷா கேட்டார்

  பிரதமரின் நேற்றைய ‘மன் கீ பாத்’ உரையை டெல்லி ஆர்.கே.புரத்தில் உள்ள ரவிதாஸ் ஆசிரமத்தில் இருந்தவாறு பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் அக்கட்சியின் தலைவர்கள் மனோஜ் திவாரி, மீனாட்சி லெகி ஆகியோரும் ஆர்வத்துடன் கேட்டனர்.

  News