ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 67 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களின் பணி பதிவேடு ஆய்வு
Views - 39 Likes - 0 Liked
-
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உள்பட 67 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களின் பணி பதிவேடுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. திறமை இல்லாத அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 48 லட்சத்து 85 ஆயிரம் பேர் அதிகாரிகளாகவும், ஊழியர்களாகவும் வேலை பார்த்து வருகின்றனர்.
மத்திய அரசின் நடைமுறைப்படி பணிக்கு வந்த 15 ஆண்டுகளுக்கு பின்னரும், 25 ஆண்டுகளுக்கு பின்னரும் அவர்களின் செயல்திறன்கள் மதிப்பிடப்படுவது வழக்கமான நடைமுறை ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசு, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் திறமையாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய்ச்சேரும் என்பதில் உறுதியாக உள்ளது. செயல்திறன் இல்லாத அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் தயக்கம் இல்லை. அரசுப்பணிகளில் ஊழலை ஒழிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறது.
அந்த வகையில் கடந்த ஓராண்டு காலத்தில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உள்பட செயல்திறனற்ற 129 பேரை மத்திய அரசு கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பி விட்டது.
இந்த நிலையில், தற்போது 67 ஆயிரம் அதிகாரிகள், ஊழியர்களின் பணி பதிவேடுகள் மத்திய அரசின் ஆய்வில் உள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் அடங்குவார்கள்.
இது தொடர்பாக மத்திய பணியாளர் நலன், பயிற்சித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘செயல்திறன் இல்லாதவர்கள் பணியில் தொடருவதை தடுக்கிற வகையில், தற்போது சுமார் 67 ஆயிரம் பேரின் பணி பதிவேடுகள் ஆராயப்பட்டு வருகின்றன. அவர்களில் 25 ஆயிரம் பேர், அகில இந்திய குடிமைப்பணிகள், அகில இந்திய காவல் பணிகள், அகில இந்திய வருவாய் பணிகள் அதிகாரிகள் மற்றும் குரூப் ஏ அதிகாரிகள் ஆவார்கள்’’ என்றார்.
எனவே ஆய்வு முடிவில் திறமை இல்லாத அதிகாரிகள் மீது பல்வேறு விதத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக மத்திய பணியாளர் நலன், பயிற்சித்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:–
ஒரு புறம் உயர் மட்ட செயல்திறனை அரசு நாடுகிறது. இன்னொரு புறம், ஊழலுக்கு இடமில்லாத நிலை உருவாக வேண்டும் என்று விரும்புகிறது. அது மட்டுமின்றி நேர்மையான அதிகாரிகள் திறம்பட செயல்படுவதற்கு நல்ல பணிச்சூழல் அமைய வேண்டும் என்றும் விரும்புகிறது.
எனவே குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தனது பணியாளர்களின் செயல்திறன் குறித்து அரசு ஆய்வு செய்கிறது.
கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு இடமாற்ற விதிகளில், விடுமுறை பயணதிட்டங்களில் சலுகைகளுடன் கூடிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
அதே நேரத்தில் அதிகாரிகளின் செயல் திறனை மதிப்பிடுவதற்கும், அடுத்த கட்ட பதவி உயர்வுக்கு தகுதியானவர்களா என முடிவு செய்வதற்கும், பதவி உயர்வு பட்டியலில் சேர்ப்பதற்கும் அரசு ஒரு வழிமுறையை உருவாக்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
News