" Work hard, stay humble, and follow your heart."

பாசனத்துக்கு அணைகளை திறக்க கோரி கலெக்டருடன் விவசாயிகள் வாக்குவாதம்

Views - 46     Likes - 0     Liked


 • குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.

  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோ, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நிஜாமுதீன், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு– பொறுப்பு) சுப்பிரமணி, மாவட்ட பாசன சங்கத் தலைவர் வக்கீல் வின்ஸ் ஆன்றோ, விவசாய சங்க பிரதிநிதிகள் புலவர் செல்லப்பா, மருங்கூர் செல்லப்பா, அந்தோணிமுத்து, முருகேசபிள்ளை, விஜி, வருக்கத்தட்டு தங்கப்பன், செண்பக சேகரபிள்ளை, மணிகண்டேஸ்வர குமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  வெளிநடப்பு

  கூட்டம் தொடங்கியதும், அரசு நிதி ஒதுக்கியும் மே மாதத்துக்குள் பொதுப்பணித்துறையால் தூர்வாரப்பட வேண்டிய கால்வாய்கள் இதுவரை தூர்வாரப்படாமல் இருப்பதைக் கண்டித்தும், ஜூன் மாதம் தொடக்கத்தில் பாசனத்துக்காக திறந்துவிடப்படும் பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகள் இதுவரை திறக்கப்படாததை கண்டித்தும் பெரும்பாலான விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாகக்கூறி வெளியே சென்றனர்.

  பின்னர் அவர்கள் நாஞ்சில் கூட்ட அரங்குக்கு வெளியே சிறிது நேரம் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். சுமார் அரைமணி நேரத்துக்குப்பிறகு விவசாயிகள் மீண்டும் கூட்ட அரங்குக்கு சென்றனர். தொடர்ந்து கூட்டம் நடந்தது.

  வாக்குவாதம் 

  அதன்பிறகும் கால்வாய்கள் தூர்வாரப்படாதது தொடர்பாகவும், பாசனத்துக்கு அணைகளை திறக்க கோரியும் விவசாயிகள் சுமார் 1 மணி நேரம் கலெக்டருடன் வாக்குவாதம் நடத்தினர். இதற்கு பதில் தெரிவிக்க முயற்சித்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியத்தையும் பேச விடாமல் விவசாயிகள் விவாதம் செய்தனர். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு நிலவியது.

  இதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை கடிதம் நாளை (இன்று) அனுப்பி வைக்கப்படும் என்றார். அதன்பிறகே இந்த விவாதம் முடிவுக்கு வந்தது.

  பின்னர் கூட்டத்தில் விவசாயிகள் நடத்திய விவாத விவரம் வருமாறு:–

  பேச்சிப்பாறை தூர்வாரப்படுமா?

  பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை எப்போது கிடைக்கும்? விவசாயிகளுக்குரிய வறட்சி நிவாரண நிதி எப்போது வழங்கப்படும்? பார்வதிபுரம் பாலப்பகுதியில் பாலத்தின் இருபுறமும் அமைக்கப்படும் பக்கச்சுவர்களுக்காக தோண்டப்பட்ட மண் இருபுறமும் உள்ள குளங்களில் கொட்டப்பட்டுள்ளது. அவை அகற்றப்படுமா? குளங்களை தூர்வாரி எடுக்கப்படும் மண்ணை ஏற்றி வரும் வாகனங்களை, மண் அள்ளும் ஜே.சி.பி. எந்திரங்களையும் அதிகாரிகள் பிடித்து வருகிறார்கள். உண்மையிலேயே முறைகேடு செய்யப்பட்டு இருந்தால் அந்த வாகனங்களை பிடிப்பதில் தவறில்லை. பேச்சிப்பாறை அணை தூர் வாரப்படுவது எப்போது? அதற்கான திட்டம் என்ன நிலையில் உள்ளது? கால்நடைகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வைக்கோல் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சி மற்றும் கேரள வாடல் நோயினால் தென்னை மரங்கள் பட்டுப்போகின்றன. அதேபோல் செல்போன் டவர்களாலும் தென்னை மரங்கள் பாதிக்கப்படுகிறதா? என்பதை தென்னை விஞ்ஞானிகள் மூலம் கண்டறிய வேண்டும். பெருஞ்சாணி அணையைச்சுற்றி உள்ள அரசு நிலங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடுவதை தவிர்த்து, தோட்டக் கலைத்துறையிடம் கொடுத்தால் விவசாயம் சம்பந்தப்பட்ட பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொள்ளவும், அதனால் விவசாயிகள் பயன்பெற உதவும்.

  மத்திய அரசு ஒப்புதல்

  அதிகாரிகள்:– பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். வறட்சி நிவாரண நிதி இன்னும் வரவில்லை. பார்வதிபுரம் மேம்பாலம் அருகில் இருபுறமும் கட்டப்படும் பக்கச்சுவருக்காக தோண்டப்பட்ட மண் குளங்களில் கொட்டப்பட்டு இருந்தால் அவை உடனே அகற்றப்படும். பேச்சிப்பாறை அணையை தூர்வாருவது சம்பந்தமான கோப்புகள் மத்திய அரசின் ஒப்புதலைப் பெறும் நிலையில் உள்ளது. கால்நடைகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வைக்கோல் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  இவ்வாறு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவாதம் நடந்தது.

  இந்த கூட்டத்தில் சுபையார்குளம் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் ஜோணி, கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் வடசேரி கிராம எல்லைக்கு உள்பட்ட சுபையார்குளத்தை நேரடியாக பார்வையிட்டு, குளத்தை தூய்மைப்படுத்தி நீர்போக்குவரத்து பாதைகளை சரிசெய்து, நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டு இருந்தது.

  News