உரம், டிராக்டர் பாகங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
Views - 40 Likes - 0 Liked
-
உரம், டிராக்டரின் விசேஷ பாகங்கள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரி விகிதம் குறைக்கப்படுவதாக அருண் ஜெட்லி அறிவித்தார்.
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில், சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவதில் சாதனை புரிந்துள்ளது.
இதற்காக, ஜி.எஸ்.டி. கவுன்சில் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தில், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார்.
பின்னர், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில், விவசாயிகளின் சுமையை குறைக்கும் வகையில், உரம், டிராக்டர் பாகங்கள் ஆகியவற்றுக்கு வரியை குறைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதுபற்றி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது:–
உரத்துக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதனால், உரத்தின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்ததால், வரி விகிதத்தை 5 சதவீதமாக குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் உரம் விலை குறையும்.
அதுபோல், டிராக்டர்களின் விசேஷ பாகங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கவும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதுதவிர, சில கூடுதல் விதிமுறைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
News