வங்க கடலில் இன்று தொடங்குகிறது: இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படை கூட்டுப்பயிற்சி
Views - 31 Likes - 0 Liked
-
இந்திய கடற்படையை வலுப்படுத்தும் வகையில், பல்வேறு வெளிநாடுகளுடன் இணைந்து நம்நாட்டு வீரர்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், இந்தியா-அமெரிக்கா இடையே ‘‘மலபார்’’ என்ற பெயரில் ஆண்டுதோறும் கூட்டுப்பயிற்சி மற்றும் போர் ஒத்திகையில் ஈடுபட, கடந்த 1992ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்கிடையில், கடந்த 2005ம் ஆண்டு ஜப்பானும் மலபார் கூட்டுப்பயிற்சியில் இணைத்துக் கொண்டது. இந்நிலையில், இந்த ஆண்டு மலபார் கூட்டுப்பயிற்சியை சென்னையில் நடத்த 3 நாட்டு அரசுகளும் தீர்மானித்தன. ஜூலை 7 முதல் 17ம் தேதிக்குள் 3 நாட்கள் இந்த பயிற்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 7ம் தேதி அமெரிக்கா மற்றும் ஜப்பான் போர் கப்பல்கள் அந்நாட்டில் இருந்து புறப்பட்டன.
இந்நிலையில், போர் ஒத்திகையில் ஈடுபடும் அமெரிக்கா, ஜப்பான் கப்பல்கள் நேற்று சென்னை துறைமுகம் வந்தன. இந்திய கப்பற்படை அதிகாரிகள் 2 நாட்டு கப்பல்கள் மற்றும் வீரர்களை வரவேற்றனர். இன்று முதல் நடுக்கடலில் கூட்டுப்பயிற்சி தொடங்குகிறது. மூன்று நாள் நடக்கும் இந்த பயிற்சியில் 3 நாட்டு வீரர்களும் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபடுவார்கள்.அப்போது, கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுப்பது, எதிரி நாட்டின் நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து தாக்குவது, வான்வழி தாக்குதலை எதிர்கொள்வது, கடற்கொள்ளையர்களை அடையாளம் கண்டு கைது செய்வது உள்ளிட்ட விஷயங்களில் தங்கள் திறமையை மேலும் வலுப்படுத்த தீவிர பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
தற்போது இந்தியா-சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளும் இந்த கூட்டுப்பயிற்சி உலக நாடுகளிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.News