முதன்முறையாக இறக்குமதியாகும் அமெரிக்க கச்சா எண்ணெய்
Views - 38 Likes - 0 Liked
-
இந்தியா, முதன்முறையாக, அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய உள்ளது.
கடந்த மாதம், பிரதமர் மோடி உடனான சந்திப்பின் போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு அதிகளவில் எரிசக்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய உள்ளதாக தெரிவித்து இருந்தார்.இதையடுத்து, பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், அமெரிக்காவில் இருந்து, 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிதி பிரிவு தலைவர், ஏ.கே.ஷர்மா கூறியதாவது: எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள், உற்பத்தியை குறைத்து, கச்சா எண்ணெய் விலை உயர வழிவகுத்து உள்ளன. இதையடுத்து, அதிக கந்தகம் கொண்ட அமெரிக்க கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய, நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதர எண்ணெய் வகைகளை விட, அமெரிக்க கச்சா எண்ணெயின் சுத்திகரிப்புச் செலவினம் மிகக் குறைவாக உள்ளதால், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோசைனா நிறுவனம், கச்சா எண்ணெய் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இதற்காக, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்திடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
செலவு குறைவு:
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் உற்பத்தி குறைப்பு முடிவால், கந்தக தன்மை அதிகமுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதை அடுத்து, இவ்வகை எண்ணெயை, அமெரிக்காவில் இருந்து தென்கொரியா, சீனா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, தைவான் ஆகிய நாடுகள் இறக்குமதி செய்யத் துவங்கி உள்ளன. இதில், தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. குறைந்த செலவில், சுலபமாக சுத்திகரிக்கக் கூடியதாக, அமெரிக்க கச்சா எண்ணெய் உள்ளதே இதற்கு காரணம்.News