தலைமை செயலாளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
Views - 65 Likes - 0 Liked
-
ஆகஸ்டு 15–ந் தேதிக்குள், அனைத்து வர்த்தகர்களும் ஜி.எஸ்.டி.யின் கீழ் பதிவு செய்வதை உறுதிப்படுத்துங்கள் என்று மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, மாநில அரசு தலைமை செயலாளர்களுடன் காணொலி முறையில் மாதந்தோறும் உரையாடி வருகிறார். ‘துடிப்பான நிர்வாகம்–விரைவான அமலாக்கம்’ என்ற தலைப்பில் நடக்கும் உரையாடலில், பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அப்போது ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனை நேற்று நடைபெற்றது. அப்போது, அனைத்து வர்த்தகர்களும் ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் ஜி.எஸ்.டி. நடைமுறையின் கீழ் பதிவு செய்வதை உறுதி செய்ய விரைந்து பணியாற்றுங்கள் என்று தலைமை செயலாளர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.
மத்திய பொதுப்பணித்துறை தொடர்பான குறைகளுக்கு தீர்வு காணும் நடைமுறையில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றியும் விவாதித்தார். அனைத்து வியாபாரிகளும் அரசின் மின்னணு சந்தை முறையில் இணைய ஊக்குவிக்குமாறு மத்திய பொதுப்பணித்துறையை அவர் வலியுறுத்தினார்.
மேலும், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ரெயில்வே, சாலை மற்றும் பெட்ரோலிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
சென்னை கடற்கரை–கொருக்குப்பேட்டை இடையே 3–வது ரெயில் பாதை அமைத்தல், சென்னை கடற்கரை–அத்திப்பட்டு இடையே 4–வது ரெயில் பாதை அமைத்தல் ஆகியவை உள்ளிட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இத்திட்டங்களில், மேற்கொண்டு தாமதம் ஏற்பட்டு செலவு அதிகரிப்பதை தவிர்க்க, அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்குமாறு தலைமை செயலாளர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். இதுபோன்ற உள்கட்டமைப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.
மேலும், ‘பிரதமரின் அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் முன்னேற்றம் பற்றியும் ஆய்வு செய்தார். புதிய கட்டுமான தொழில்நுட்பத்தை பின்பற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
News