32000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்; 3 மாதங்களுக்குள் 2000 புள்ளிகள் ஏற்றம்
Views - 40 Likes - 0 Liked
-
தொடர்ந்து நான்காவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிந்தன. முதல் முறையாக சென்செக்ஸ் 32000 புள்ளிகளை நேற்று கடந்தது. கடந்த ஏப்ரல் 26-ம் தேதி சென்செக்ஸ் முதல் முறையாக 30000 புள்ளியை தொட்டது. கிட்டத்தட்ட 11 வாரங்களில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. கடந்த நான்கு வர்த்தக தினங்களில் மட்டும் 676 புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. பணவீக்கம் குறைவாக இருந்ததன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் நேற்று புதிய உச்சத்தை தொட்டன. மூன்று மாதங்களில் சென்செக்ஸ் 6 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஆனால் சென்செக்ஸ் பட்டியலில் உள்ள சில பங்குகள் 20 சதவீதத்துக்கு மேல் உயர்ந்திருக்கிறது.
டாடா ஸ்டீல் 23% ஏற்றம்
சென்செக்ஸ் பட்டியலில் அதிகம் உயர்ந்த பங்காக டாடா ஸ்டீல் இருக்கிறது. கடந்த மூன்று மாதத்தில் இந்த பங்கு 23 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. 430 ரூபாயில் இருந்த பங்கு தற்போது 560 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நடப்பாண்டில் இதுவரை இந்த பங்கு 43 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
இதனை தொடர்ந்து ஹெச்யூஎல் பங்கு 21 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஐசிஐசிஐ வங்கி மற்றும் மாருதி சுசூகி ஆகிய பங்குகள் தலா 18 சதவீதம் உயர்ந்திருக்கின்றன. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ஐடிசி இருக்கிறது. இந்த பங்கு கடந்த மூன்று மாதங்களில் 16 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
இந்த மூன்று மாத காலத்தில் துறை வாரியாக பார்க்கும்போது எப்.எம்.சி.ஜி குறியீடு அதிகபட்சமாக 13 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதனை தொடர்ந்து ரியால்டி குறியீடு 11 சதவீதம் உயர்ந்திருக்கிறது. வங்கி மற்றும் ஆட்டோ குறியீடுகள் தலா 7 சதவீதம் உயர்ந்திருக்கின்றன. இந்த மூன்று மாத காலத்தில் ஹெல்த்கேர் மற்றும் ஆயில் அண்ட் கேஸ் குறியீடு தலா 4 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த மூன்று மாதத்தில் நான்கு பங்குகள் கடும் சரிவை சந்தித்திருக்கின்றன. லுபின் பங்கு 17 சதவீதமும், சன் பார்மா பங்கு 12 சதவீதமும், ஓஎன்ஜிசி 11 சதவீதமும் மற்றும் கோல் இந்தியா 9 சதவீதமும் சரிந்திருக்கின்றன.
நிப்டி 9892
சென்செக்ஸை போலவே நிப்டியும் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. 10000 புள்ளிகளை நிப்டி நெருங்குகிறது. நேற்றைய வர்த்தகத்தில் 75 புள்ளிகள் உயர்ந்து 9892 புள்ளியில் நிப்டி முடிவடைந்தது.
பணவீக்கம் குறைந்ததை அடுத்து பெரும்பாலான வல்லுநர்கள் வட்டி விகிதம் குறையும் என கணித்திருக்கின்றனர். இதன் காரணமாக சந்தையில் ஏற்றம் இருக்கிறது.
ரிசர்வ் வங்கி கடந்த 2015-ம் ஆண்டு முதல் வட்டி விகிதங்களை குறைத்து வருகிறது. இதுவரை 1.75 சதவீதம் வரை ரெபோ விகிதத்தை குறைத்திருக்கிறது. கடந்த அக்டோபரில் இருந்து இதுவரை வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.
சந்தை மதிப்பு
பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.130 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. (2 லட்சம் டாலருக்கு மேல்). பிஎஸ்இ-ல் மொத்தம் 5200 நிறுவனங்களுக்கு மேல் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் 2885 நிறுவனங்களில் தொடர்ந்து வர்த்தகம் நடந்து வருகிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 150-க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார உச்சபட்ச விலையை தொட்டன.
News