" If you fell down yesterday, stand up today."

குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நேரில் ஆய்வு

Views - 63     Likes - 0     Liked


  • குமரி மாவட்டம் ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மாடன்விளை, தலக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு புதுவிளை, நெய்யூர் பேரூராட்சிக்கு உட்பட்ட முரசங்கோடு, திங்கள்நகர் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட நடுநேரி, திங்கள்நகர் குழந்தைகள் மையம், இரணியல் பேரூராட்சிக்கு உட்பட்ட மேலத்தெரு, வில்லுகுறி பேரூராட்சிக்கு உட்பட்ட மாடத்தட்டுவிளை, வில்லுகுறி காலனி மற்றும் வில்லுகுறி அரசு உயர்நிலைப்பள்ளி போன்ற பகுதிகளில் களப்பணியாளர்களால் மேற்கொள்ளப்படும் டெங்கு காய்ச்சல் தடுப்புப்பணிகளை நேற்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
     
    பின்னர் பொதுமக்களிடம் களப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளை குறித்து கேட்டறிந்தார். குடிநீரில் கலக்கப்படும் குளோரின் அளவினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து பொதுமக்களிடம் வீடு மற்றும் வீட்டின் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், உபயோகப்படுத்தப்படாத பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், குறிப்பாக, களப்பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
     
    இந்த ஆய்வின் போது, முதன்மை பூச்சியியல் வல்லுனர் டாக்டர் முகமது அப்துல் காதர், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்-பொறுப்பு) மேரி, மாவட்ட பூச்சியியல் வல்லுனர் லிபிமெர்சிலின், குருந்தங்கோடு வட்டார மருத்துவ அதிகாரி பிரதீப், செயல் அலுவலர்கள் கணேசன் (ரீத்தாபுரம் பேரூராட்சி), ஜெயமாலினி (திங்கள்நகர் பேரூராட்சி), வினிதா (வில்லுகுறி பேரூராட்சி), மகாராஜா (இரணியல் பேரூராட்சி) உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
     
    மனித சங்கிலி
     
    நாகர்கோவில் நகராட்சி மற்றும் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி இணைந்து, டெங்கு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று நாகர்கோவில் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற மனித சங்கிலி நடந்தது. இதில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பள்ளி வளாகப் பகுதியில் கலந்து கொண்டார்.
     
    பின்னர் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த, டெங்கு தடுப்பு மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியினை பார்வையிட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறியதாவது:-
     
    1000 களப்பணியாளர்கள்
     
    குமரி மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 1,000-த்திற்கும் மேற்பட்ட களபணியாளர்கள், குடியிருப்பு பகுதிக்கு நேரடியாக சென்று கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள். மாணவ, மாணவிகள் பள்ளிக்கு தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் வராதபட்சத்தில் உடனடியாக ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மூலம் அவர்களது பெற்றோர்களை தொடர்பு கொண்டு காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, சிகிச்சை பெறுமாறு தெரிவிக்க வேண்டும். மேலும், அவர்களின் முழு விவரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பிட வேண்டும்.
     
    இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார். பின்னர் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியையும் தொடங்கி வைத்தார். 
    News