தாமிரபரணி ஆற்றில் ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை
Views - 62 Likes - 0 Liked
-
குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில், நீண்ட காலமாக முன்னோர் நினைவாக ஆடி அமாவாசையையொட்டி பலிகர்ம பூஜை நிகழ்ச்சி நடந்து வருகிறது. பலிகர்மம் நிறைவேற்றி செல்பவர்கள் முன்னோர் நினைவாக தென்னை, மா, பலா போன்ற மரக்கன்றுகளை வாங்கி வீட்டுக்கு சென்று நட்டு வைப்பது வழக்கம்.
நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு குமரி மாவட்டம் மற்றும் கேரள எல்லை பகுதியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் என ஏராளமானோர் குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் குவிந்தனர். அவர்கள் தங்கள் முன்னோர் நினைவாக பலிகர்ம பூஜை நடத்தி தர்ப்பணம் செய்தனர்.
இதற்காக ஆற்றின் கரையில் பல புரோகிதர்கள் பலிகர்ம பூஜை பொருட்களான பொங்கல், பச்சரிசி, தெற்றிப் பூ, ஆறுகம்புல், கடுகு போன்ற பொருட்களுடன் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன், பலி கர்மம் நிறை வேற்றுபவர்கள் ஆற்றில் குளித்து ஈரத்துணியுடன் வந்து முட்டியிட்டு அமர்ந்து இருந்தனர். உடனே, புரோகிதர்கள் மந்திரம் ஓதி, வாழை இலையில் பலிகர்மம் பொருட்களை கொடுத்து அனுப்பினர். பலிகர்மம் நிறைவேற்றுபவர்கள் வாழை இலையில் பலிகர்ம பொருட்களை தலையில் சுமந்தவாறு ஆற்றுக்குள் சென்று மூழ்கி அவற்றை ஆற்றில் மிதக்க விட்டனர்.
இந்த நிகழ்ச்சி நேற்று அதிகாலை முதல் பிற்பகல் வரை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை நடத்தி தர்ப்பணம் செய்தனர்.
திற்பரப்பு அருவி பகுதியில் நேற்று பலிகர்ம பூஜை நடந்தது. இதற்காக நேற்று ஏராளமான பக்தர்கள் திற்பரப்பு மகாதேவர் கோவில் அருகே கூடினர். தொடர்ந்து, வரிசையாக அமர்ந்து பலிகர்ம பூஜைகள் நிறைவேற்றி அருவியில் குளித்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் நிறைவேற்றினர்.
இதுபோல், திருவட்டார் அருகே உள்ள மூவாற்றுமுகம் ஆற்றங்கரை உள்பட மாவட்டத்தில் பல இடங்களில் பலிகர்ம பூஜை நிறைவேற்றப்பட்டது.News