" If you fell down yesterday, stand up today."

பிரதமர் மோடி இன்று ராமேசுவரம் வருகை அப்துல்கலாம் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்

Views - 59     Likes - 0     Liked


  • ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில் மத்திய அரசின் பாதுகாப்புத் துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 3½ ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மணிமண்டபம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
     
    ‘அப்துல்கலாம் தேசிய நினைவகம்’ என்று பெயரிடப்பட்ட இந்த மணிமண்டப கட்டுமானப் பணிகளுக்கு அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
     
    மணிமண்டபத்தில் அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 91 ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
     
    அப்துல்கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான இன்று (வியாழக்கிழமை) இந்த மணிமண்டபத்தை, பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்.
     
    இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு இன்று காலை 10 மணிக்கு வருகிறார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்கிறார்கள்.
     
    பிரதமர் மோடி அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 11 மணிக்கு மண்டபம் முகாமில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைகிறார். அதன்பின் கார் மூலம் புறப்பட்டு காலை 11.20 மணிக்கு பேய்க்கரும்பில் உள்ள அப்துல் கலாம் மணிமண்டபத்துக்கு வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் பிரதமர் தேசியகொடி ஏற்றுகிறார். பின்பு மணிமண்டபத்தை திறந்துவைக்கிறார்.
     
    பிறகு ராமேசுவரம் முதல் டெல்லி வரை செல்ல உள்ள “அப்துல்கலாம்-2020” என்ற சாதனை பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.
     
    இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்டு மண்டபம் முகாம் அருகே இந்திய கடலோர காவல்படை குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு வருகிறார். அங்கு ராமேசுவரம்-அயோத்தி இடையேயான புதிய ரெயில் சேவையையும், ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தையும் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
     
    அத்துடன், ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வரை போடப்பட்டுள்ள புதிய சாலையையும் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்.
     
    விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அன்வர்ராஜா எம்.பி. மற்றும் மத்திய-மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.
     
    பிரதமரின் வருகையையொட்டி நேற்று உயர் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. பிரதமர் வந்திறங்கும் மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து ராமேசுவரம் வரை இந்த ஒத்திகை நடைபெற்றது.
     
    ராமேசுவரம் தீவு பகுதியிலும், விழா நடைபெறும் பகுதியிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
     
    விழாவையொட்டி பிரதமரின் தனிப்பிரிவு பாதுகாப்பு படையினர், சிறப்பு பாதுகாப்பு படையினர், மாநில பாதுகாப்பு படையினர், ஆயுதப்படையினர், உள்ளூர் போலீசார் என 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
     
    கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலோர பகுதி சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் மூலம் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
     
    வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் 35 பேர் மண்டபம் விழா மேடை பகுதியில் இரவு பகலான சோதனை மேற்கொண்டுள்ளனர். 71 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விழா நடைபெறும் இடங்களில் துருவித்துருவி சோதனையிட்டு வருகின்றனர்.
     
    ஆளில்லா குட்டி விமானம் வரவழைக்கப்பட்டு துல்லியமாக வீடியோ பதிவு செய்து கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
     
    பிரதமரின் வருகையையொட்டி ஒட்டுமொத்தமாக ராமேசுவரம் தீவு பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

     

    News