ராமேசுவரத்திற்கு பிரதமர் வருகையையொட்டி கன்னியாகுமரியில் கடலோர காவல் படையினர் கண்காணிப்பு
Views - 36 Likes - 0 Liked
-
ராமேசுவரத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவு மண்டபம் திறப்புவிழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மண்டபத்தை திறந்துவைக்கிறார்.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமேசுவரம் கடல் பகுதி என்பதால் தீவிரவாதிகள் யாரும் கடல் வழியாக ஊடுருவாமல் இருக்க கடலிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி கடல் பகுதியிலும் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ‘சஜாக் ஆபரேஷன்’ என்ற பாதுகாப்பு நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீஸ் படையினர் அதிநவீன படகு மூலம் கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை 7 மணி முதல் தொடங்கிய இந்த பணி மாலை 5 மணி வரை நடைபெற்றது. அவர்கள் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களின் அடையாள அட்டைகளை சோதனை செய்தனர். சந்தேகத்திற்கு இடமான படகுகள் ஊடுருவி உள்ளதா? என்றும் கண்காணித்தனர்.
மேலும், குமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள 44 கடற்கரை கிராமங்களிலும் உள்ளுர் போலீசார் உதவியுடன் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் சோதனை சாவடிகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.News