தனியார் நிறுவனங்களின் பால் தரம் குறைந்தது தான் ஐகோர்ட்டில் ஆய்வு அறிக்கை தாக்கல்
Views - 30 Likes - 0 Liked
-
3 தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பால் தரம் குறைந்தது என்பதை நிரூபிக்கும் விதமாக உத்தரபிரதேச மாநில ஆய்வகத்தில் செய்யப்பட்ட ஆய்வு அறிக்கை ஐகோர்ட்டில் அமைச்சர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தனியார் நிறுவனங்களின் பால் தரம் குறைந்தது என்றும், ரசாயன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளது என்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஆரோக்யா, டோட்லா, விஜய் ஆகிய தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.அதில், தங்கள் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பால் மற்றும் பால் பொருட்கள் குறித்து பேசுவதற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், அவதூறான கருத்துகளை தெரிவித்த அமைச்சர் தங்கள் நிறுவனத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் கூறியிருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பால் குறித்து ஆதாரம் இல்லாமல் கருத்துகளை தெரிவிக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.இந்த நிலையில், இந்த வழக்கிற்கு அமைச்சர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘தன்னை மிரட்டுவதற்காக இதுபோன்ற வழக்குகளை தனியார் நிறுவனங்கள் தொடர்ந்துள்ளன என்றும், அந்த நிறுவனங்கள் விற்பனை செய்யும் பால் தரம் குறைந்தவை தான்’ என்றும் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த 3 நிறுவனங்கள் விற்பனை செய்யும் பால் மாதிரிகளை ஆய்வு செய்த உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள ‘ரெப்ரல் புட் டெக்னாலஜி’ என்ற ஆய்வக அறிக்கையை அமைச்சர் சார்பில் ஆஜரான வக்கீல் தாக்கல் செய்தார்.அந்த அறிக்கையில், ஆரோக்யா உள்பட 3 நிறுவனங்கள் விற்பனை செய்யும் பால் மாதிரிகள் கடந்த 18-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை ஆய்வு செய்யப்பட்டது என்றும், பாலில் தரம் குறைவாக உள்ளது என்றும், கொழுப்பு நிர்ணயிக்கப்பட்ட அளவில் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது.இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்டு 1-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.News