" “Practice kindness all day to everybody and you will realize you’re already in heaven now.” – Jack Kerouac"

‘ஊழலை ஒழிக்க உறுதி ஏற்போம்’ பிரதமர் மோடி வேண்டுகோள்

Views - 70     Likes - 0     Liked


 • பிரதமர் மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் ‘மன் கீ பாத்’ (மனதில் இருந்து பேசுகிறேன்) என்ற தலைப்பில் உரையாற்றுவதை வழக்கமாக கொண்டு உள்ளார்.

  ஜூலை மாதத்தின் கடைசி ஞாயிறான நேற்று அவர் வெள்ளையனே வெளியேறு இயக்கம், குஜராத் வெள்ள நிலைமை, சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்பு, பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது ஆகியவை குறித்து பேசினார்.

  அவர் கூறியதாவது:–

  ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆகி இருக்கிறது. அதன் பலன்கள் தெரியத்தொடங்கி இருக்கின்றன. ஏழைகளுக்கு தேவையான பொருட்களின் விலை குறைந்துள்ளது. இந்த வரி முறை உண்மையில் நமது பொருளாதாரத்தின் மீது ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஒரே தேசம், ஒரே வரி என்ற மிகப்பெரிய கனவு மெய்ப்பட்டு இருக்கிறது.

  ஜி.எஸ்.டி. அமலாக்கம் வரலாற்று ரீதியான ஒரு வெற்றி, சரித்திர சாதனை. இது வரி சீர்திருத்தம் மட்டும் அல்ல. ஒரு புதிய, நேர்மையான கலாசாரத்துக்கு பலம் கூட்டும் பொருளாதார முறை. இதை ஒரு வகையில் சமூக சீர்திருத்த இயக்கம் என்று கூட சொல்லலாம்.

  இந்த வரி விதிப்பு முறையின் வெற்றி இந்தியாவை புதிய உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. நமது ஜி.எஸ்.டி.யின் செயல்பாடு எதிர்காலத்தில் உலக பல்கலைக்கழகங்கள் பலவற்றில் ஒரு மாதிரி ஆய்வாக மலரும்.

  1942–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை மகாத்மா காந்தி தொடங்கினார். வெள்ளையர் ஆட்சியை அகற்ற செய் அல்லது செத்துமடி என அறைகூவல் விடுத்தார். அதனால் 1947–ம் ஆண்டு ஆகஸ்டு 15–ந் தேதி நாடு சுதந்திரம் அடைந்தது.

  இன்று நாம் 2017–ல் இருக்கிறோம். எப்படி 1942 முதல் 1947 வரையிலான கால கட்டம் விடுதலை அடைவதற்கு உரியதாக அமைந்ததோ, அதேபோல் 2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டுகளும் நமது மனஉறுதியும், தீர்மானம் மிக்கதாகவும் அமையட்டும்.

  நாடு விடுதலை பெற்று 2022–ம் ஆண்டுடன் 75 வருடங்கள் நிறைவடைகிறது. இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகு அதை நாம் கொண்டாட இருக்கிறோம். அதற்கு நாம் உறுதியான அர்ப்பணிப்பை இன்றே மேற்கொள்ளவேண்டும். 2017 நமது உறுதிப்பாட்டின் ஆண்டாக மாறவேண்டும்.

  அடுத்த 5 ஆண்டுகளில் பயங்கரவாதம், மதவாதம், சாதியவாதம், ஊழல் ஆகியவற்றை ஒழிப்பதற்கு நாம் அனைவரும் உறுதிமொழி ஏற்போம். அத்துடன் ஏழ்மையை அகற்றவும், மாசு இல்லாமல் செய்திடவும் உறுதிகொள்வோம்.

  இந்த ஆகஸ்டு மாதம் முதல், நமது உறுதிப்பாட்டுக்கு செயலூக்கம் அளித்து, அதை வெற்றி பெற செய்யும் பெரும் இயக்கமாக தொடங்குவோம்.

  ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு சமூக அமைப்பும், உள்ளாட்சி அமைப்புகளும், பள்ளிகள், கல்லூரிகள், பல்வேறு அமைப்புகள் என அனைவரும் புதிய பாரதம் படைக்க மேற்கண்ட ஒன்றில் ஏதாவது ஒரு உறுதிப்பாட்டை மேற்கொள்வோம். அடுத்த 5 ஆண்டுகளில் வெற்றியடைய செய்யும் உறுதிப்பாடாக இது அமையட்டும்.

  நரேந்திர மோடியின் செயலியில் இளைய சமுதாயத்தினருக்காக வெள்ளையனே வெளியேறு வினாவிடை போட்டி நடத்தப்படும்.

  இந்த முறையும் ஆகஸ்டு 15–ந் தேதி செங்கோட்டையில் பேசும்போது என்ன பேசவேண்டும் என்பது குறித்து வழக்கம்போல் எனக்கு தெரிவியுங்கள். அவற்றை நானே படிக்கிறேன்.

  நமது பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் சமூக மறுமலர்ச்சிக்கான ஒரு இயக்கமும் ஆகும். வரும் சில நாட்களில் ரக்ஷா பந்தன், கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, துர்கா பூஜை, தீபாவளி என பண்டிகைகள் ஒன்றன் பின் ஒன்றாக வர இருக்கின்றன. இந்த வேளையில்தான் ஏழைகளுக்கு வருமானம் ஈட்ட ஒரு வாய்ப்பும் ஏற்படுகிறது.

  கடந்த சில நாட்களுக்கு முன்பாக நமது பெண்கள், பெண்களுக்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகச்சிறந்த செயல்பாட்டை புரிந்துள்ளனர். இந்த வாரம் அவர்களோடு உரையாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தங்களால் உலககோப்பையை வெற்றி கொள்ள இயலவில்லையே என்ற சுமை அவர்களை அழுத்திக்கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது.

  நீங்கள் வெற்றி பெறவில்லை என்ற எண்ணத்தை உங்கள் மனதில் இருந்து அடியோடு அகற்றிவிடுங்கள், நீங்கள் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறாவிட்டாலும் 125 கோடி மக்களின் மனங்களையும் வெற்றி கொண்டு விட்டீர்கள் என்று அவர்களிடம் கூறினேன்.

  குறிப்பாக பெண்கள், தேசத்துக்கு பெருமை சேர்ப்பதில் பல வி‌ஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்காக நமது பெண்களுக்கு இதயம் கனிந்த பாராட்டுகள், வாழ்த்துகள்.

  இவ்வாறு அவர் கூறினார்.

   

   

  News