வீடு, வாகன கடன் இஎம்ஐ குறைய வாய்ப்பு குறுகிய கால கடன் வட்டி கால் சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Views - 65 Likes - 0 Liked
-
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை கால் சதவீதம் குறைத்து, 6 சதவீதமாக நிர்ணயித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால், வங்கிகளில் வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான இஎம்ஐ குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இதில் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. பண வீக்கத்தை காரணம் காட்டி தொடர்ந்து வட்டி குறைப்பில் ரிசர்வ் வங்கி கெடுபிடி காட்டி வந்தது. இதனால் தொழில் துறையினர் கோரிக்கை விடுத்தும் தனது முடிவை ரிசர்வ் வங்கி மாற்றிக்கொள்ளவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபரில் வட்டி குறைக்கப்பட்டது. அதன்பிறகு இப்போதுதான் வட்டி குறைப்பை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போதைய வட்டி குறைப்பு, ஆறு ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவாகும். வட்டி விகிதம் ரிசர்வ் வங்கி கவர்னரை தலைவராக கொண்ட குழு முடிவு செய்து வருகிறது.
ஆறு பேர் கொண்ட இந்த குழுவில், உஜிர்த்படேல் உட்பட 4 பேர் கால் சதவீத வட்டி குறைப்பை பரிந்துரை செய்து வாக்களித்துள்னர். இரண்டு பேர் அரை சதவீதம் குறைக்க கோரியுள்ளனர். ஒருவர் பழைய வட்டி தொடர கோரினர். இதை தொடர்ந்து பெரும்பான்மை அடிப்படையில் கால் சதவீதம் குறைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. ரிசர்வ் வங்கி அறிக்கையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் வருமாறு: குறுகிய காலங்களுக்கான வட்டி விகிதம் கால் சதவீதம் குறைக்கப்பட்டு 6 சதவீிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ கால் சதவீதம் குறைத்து 5.75 சதவீதமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தனியார் முதலீடுகள் மற்றும் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டங்களை கருத்தில் கொண்டு அவற்றுக்கான தடைகளை நீக்கும் வகையில் வட்டி குறைப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பண வீக்கத்தை 4 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ச்சியில் நீண்ட காலமாக தொய்வு ஏற்பட்டுள்ளதால் அதை இந்த வட்டி குறைப்பு சரி செய்ய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாய கடன் தள்ளுபடி செய்வதால் மாநிலங்களுக்கு நிதி இழப்பு ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அடுத்த நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் அக்டோபர் 3 மற்றும் 4ம் தேதிகளில் நடக்கிறது.
* குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி 6%
* ரிவர்ஸ் ரெப்போ 5.75 சதவீதமாக நிர்ணயம்
* விவசாய கடன் தள்ளுபடியால் மாநில அரசுகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும் என ரிசர்வ் வங்கி கருத்து.News