ஜிஎஸ்டி-யால் தங்கத்தின் தேவை 37% உயர்வு
Views - 31 Likes - 0 Liked
-
ஜூன் காலாண்டில் தங்கத்தின் தேவை 37 சதவீதம் உயர்ந்து 167 டன்னாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் தங்கத்தின் தேவை 122 டன்னாக இருந்தது. ஜிஎஸ்டி காரணமாக விற்பனையாளர்கள் அதிகளவு தங்கத்தை வாங்கியதால் தங்கத்தின் தேவை அதிகரித்தது. மதிப்பு அடிப்படையில் பார்க்கும்போது தங்கத்தின் தேவை ரூ.43,600 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.33,090 கோடியாக இருந்தது.
நகைக்கான தேவை 41 சதவீதம் உயர்ந்து 127 டன்னாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 90 டன்னாக இருந்தது. 10 கிராம் தங்கத்தின் விலை 13 சதவீதம் உயர்ந்து ரூ.27,013 ஆக இருக்கிறது. ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் தங்கத்தின் தேவை காரணமாக விலை உயர்ந்திருப்பதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்திருக்கிறது.
நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதியில் தங்கத்தின் தேவை குறையும் என உலக தங்க கவுன்சில் கணித்திருக்கிறது. மேலும், அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள், பருவமழை உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் தேவை இருக்கும். முழு ஆண்டுக்கான தேவை 650 முதல் 750 டன்னாக இருக்கும் என உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குநர் பி.ஆர்.சோமசுந்தரம் கூறினார். ஜிஎஸ்டி காரனமாக தங்கத்தின் விற்பனை குறித்த மொத்த தகவல்களும் கிடைத்துவிடும். இதனால் முறையற்ற தங்க வர்த்தகம் குறையும்.
இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து குறைக்க வேண்டும். இறக்குமதி வரி அதிகமாக இருப்பதால் தங்கம் கடத்தலுக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறினார்.
சர்வதேச அளவில் ஜூன் காலாண்டில் தங்கத்தின் தேவை 10 சதவீதம் குறைந்து 953 டன்னாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 1,056 டன்னாக இருந்தது.
News