பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க கோரிய மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Views - 40 Likes - 0 Liked
-
மூத்த வக்கீலும், டெல்லி மாநில பா.ஜனதா செய்தி தொடர்பாளருமான அஸ்வின்குமார் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில் ‘நாட்டு மக்கள் அனைவருக்கும், முக்கியமாக குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் சுகாதாரம் தொடர்பான வசதிகளை ஏற்படுத்தி தருவது அரசின் கடமையாகும். மேலும், யோகா மற்றும் சுகாதார கல்வியை அளிப்பதன் மூலம் மக்களின் ஆரோக்கியத்தை அரசால் உறுதி செய்ய முடியும். அதனால் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அமைச்சகத்தின் கீழ்வரும் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் 1–ம் வகுப்பில் இருந்து 8–ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் யோகாவை கட்டாய பாடமாக்க உத்தரவிடவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘‘பள்ளிகளில் எதை கட்டாய பாடமாக வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி எங்களால் உத்தரவு எதையும் பிறப்பிக்க இயலாது. இது எங்களது வேலையும் அல்ல. இதுபோன்ற கொள்கை முடிவை அரசுதான் எடுக்க முடியும். நீதிமன்றம் தலையிட முடியாது. அப்படி இருக்கும்போது எப்படி எங்களால் இதன் மீது உத்தரவு பிறப்பிக்க இயலும்?’’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
News