டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்; ஊழல்-கருப்பு பணத்தை ஒழிப்போம்
Views - 42 Likes - 0 Liked
-
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 4-வது ஆண்டாக நேற்று மூவர்ண கொடியை ஏற்றிவைத்தார்.
மாநில தலைநகரங்களில் நடந்த சுதந்திரதின விழாவில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் தேசிய கொடியை ஏற்றினார்கள்.
டெல்லியில் தேசிய கொடியை ஏற்றிவைத்து குண்டு துளைக்காத மேடையில் நின்றபடி நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார்.
அப்போது கூறியதாவது:-
நாட்டை கொள்ளையடித்தவர்கள், ஏழைகளை கொள்ளையடித்தவர்கள் இன்றைக்கு நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கணக்கில் காட்டாத ரூ.3 லட்சம் கோடி வங்கிகளுக்கு வந்துள்ளது.
வங்கியில் செலுத்தப்பட்ட பணத்தில் ரூ.1¾ லட்சம் கோடிக்கு மேற்பட்ட டெபாசிட் குறித்து ஆய்வு நடக்கிறது.
ரூ.2 லட்சம் கோடிக்கு மேற்பட்ட கருப்பு பணம் வங்கிகளுக்கு வந்துள்ளது. அந்த பணம் எப்படி வந்தது என்று இப்போது சம்பந்தப்பட்ட நபர்கள் பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் புதிய கருப்பு பணம் உருவாவது தடுக்கப்பட்டுள்ளது.
ஊழல், கருப்பு பணத்தை ஒழிப்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வெளிப்படைத்தன்மையை கொண்டுவர நாங்கள் பாடுபடுகிறோம். ஒளிமயமான எதிர்கால இந்தியாவை காண்பதற்கும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிரான எங்களது யுத்தம் தொடரும்.
மத்திய அரசின் தீவிர நடவடிக்கையை தொடர்ந்து வருமான வரி செலுத்தி, கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்கை தாண்டி 56 லட்சம் என்ற அளவுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு இது 22 லட்சமாக இருந்தது.
இந்த ஆண்டு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை இருமடங்கை கடந்திருப்பது, கருப்பு பணத்துக்கு எதிரான யுத்தத்தினால் ஏற்பட்ட பலன் ஆகும்.
உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கை, என்ன நோக்கத்துக்காக எடுக்கப்பட்டதோ அதை அடைந்து மாபெரும் வெற்றி கண்டுள்ளது.
சரக்கு, சேவைகள் வரியை அமல்படுத்தி இருப்பது கூட்டாட்சி கூட்டுறவின் எழுச்சியை காட்டுவதாக அமைந்துள்ளது. இந்த வரிமுறையை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு தேசமே ஒன்றுபட்டுள்ளது. தொழில் நுட்பம் இதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
நாங்கள் நாட்டை வளர்ச்சியின் பாதையில், முன்னோக்கி வேகமாக செலுத்துகிறோம்.
நான் காண விரும்பும் இந்தியா, ஏழை மக்களும் கான்கிரீட் வீடுகளில் வாழ்வதும், மின்சார வசதி, குடிநீர் வசதியை பெறுவதும்தான். இவ்வாறு அவர் கூறினார்.
News