" “ The purpose of our lives is to be happy.” — Dalai Lama."

நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டது சர்தார் சரோவர் அணையை மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

Views - 97     Likes - 0     Liked


 • குஜராத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த அணையின் மூலம் மராட்டியம், குஜராத் உள்பட 4 மாநில மக்கள் பயன்பெறுவர்.

  சர்தார் சரோவர் அணை

  குஜராத்தின் வறண்ட பிராந்தியங்களான சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் வடக்கு குஜராத் உள்ளிட்ட பகுதிகளின் செழிப்புக்காகவும், ராஜஸ்தானின் சில மாவட்டங்களின் வளத்துக்காகவும் குஜராத்தின் நவகம் பகுதியில் நர்மதை ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டுவதற்காக கடந்த 1961-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதி அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டது.

  1980-ல் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்ட இந்த அணைத்திட்டம் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் இடையூறுகளை சந்தித்தது. இந்த அணையால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி சமூக ஆர்வலர் மேதா பட்கரின் நர்மதை அணை பாதுகாப்பு திட்ட அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

  சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

  எனவே இந்த திட்டத்துக்கு 1996-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இதனால் அணையின் கட்டுமானப்பணிகளில் மேலும் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே அணைக்கு ஆதரவாகவும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன.

  இந்த வழக்கில் கடந்த 2000-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அணையின் உயரத்தை 138 மீட்டராக உயர்த்தி கட்டுமான பணிகளை நடத்துமாறு அனுமதி அளித்தது. எனினும் அணைக்கு எதிரான போராட்டங்களால் கட்டுமானப்பணிகளில் அவ்வப்போது இடையூறு ஏற்பட்டு வந்தது.

  இந்த நிலையில் 2006-ம் ஆண்டு குஜராத்தில் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடி, இந்த அணைத்திட்டத்துக்காக 51 மணி நேர உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

  பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதும், அணையின் உயரத்தை அதிகரிக்க பிரதமர் மோடி அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து கட்டுமானப்பணிகள் வேகமெடுத்ததுடன், 138.68 அடியாகவும் கட்டி முடிக்கப்பட்டது.

  நாட்டுக்கு அர்ப்பணிப்பு

  சுமார் 56 ஆண்டுகளாக கட்டுமானப்பணிகள் நடந்து வந்த இந்த சர்தார் சரோவர் அணை இறுதியாக நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கேவடியா பகுதியில் அணைக்கு அருகே நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கல்வெட்டினை திறந்து அணையை அர்ப்பணித்து வைத்தார்.

  அப்போது மாணவ-மாணவிகள் பஜனை பாடினர். முன்னதாக அங்கு சிறப்பு பூஜை ஒன்றும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி, குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  பொதுக்கூட்டம்


  பின்னர் அங்கிருந்து சுமார் 55 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள தபோய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் மோடி பார்வையிட்டார். அங்கு அவர் படேல் மற்றும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார்.

  இதைத்தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

  எனது பிறந்த நாளான இன்று இந்த அணையை திறந்து வைக்கும் தருணத்தை மிகுந்த உணர்வுப்பூர்வமாக உணர்கிறேன். நர்மதை அணையில் கட்டப்பட்டு உள்ள சர்தார் சரோவர் அணையை போல ஏராளமான தடைகளை சந்தித்த எந்த அணையும் உலகில் இல்லை.

  இந்த அணைக்கு எதிராக ஏராளமான தவறான செய்திகள் பரப்பப்பட்டன. இந்த திட்டத்தை நிறுத்துவதற்கு ஏராளமானோர் சதி செய்தனர். அவர்களைப்பற்றி எனக்கு தெரியும். ஆனால் அவர்களின் பெயரை கூறி இந்த நிகழ்வை அரசியலாக்க விரும்பவில்லை.

  பொறியியல் அதிசயம்

  இந்த திட்டத்துக்கு நிதியுதவி செய்ய முன்வந்த உலக வங்கி, பின்னர் சுற்றுச்சூழல் காரணங்களை காட்டி பின்வாங்கியது. இந்த மிகப்பெரிய திட்டத்தை நாங்கள் சொந்த செலவில் கட்டி முடித்து விட்டோம். இதை கட்டி முடிப்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

  இந்த பிராந்தியத்தின் புதிய மற்றும் வளர்ந்து வரும் சக்தியாகவும், ஊக்குவிக்கும் சக்தியின் சின்னமாகவும் சர்தார் சரோவர் அணை உருவாகும். இது ஒரு பொறியியல் அதிசயம் ஆகும். ஒவ்வொரு என்ஜினீயரும் இதைப்பார்த்து கற்க வேண்டும்.

  வல்லபாய் படேல்

  இந்த அணைத்திட்டம் மூலம் குஜராத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரத்தில் இருந்து வரும் தண்ணீரை சேமிக்க வழி ஏற்படுகிறது. மேலும் எல்லைப்பாதுகாப்பு படையினரின் நீர் தேவை பூர்த்தியாக்கப்படுவதுடன், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மராட்டிய மாநிலங்களின் நீராதாரத்துக்கும் வழி ஏற்படுகிறது.

  நாட்டின் முதல் உள்துறை மந்திரியான வல்லபாய் படேல், இந்த திட்டம் பற்றி 70 ஆண்டுகளுக்கு முன்பே கனவு கண்டார். தொலைநோக்கு பார்வை கொண்ட அவர் நீண்டகாலம் வாழ்ந்திருந்தால் இந்த அணை 1960 அல்லது 70-களிலேயே முடிந்திருக்கும். அதன் மூலம் மேற்கு மாநிலங்களின் வளர்ச்சி உறுதி செய்யப்பட்டு இருக்கும்.

  125 கோடி மக்கள் கொண்ட ஒரு நாட்டில் சிறிய அளவிலான கனவு காண்பதற்கு எனக்கு உரிமை இல்லை. எனவேதான் சர்தார் படேலுக்கு உலகிலேயே மிகவும் உயரமான சிலையை நிறுவ முடிவு செய்தேன்.

  இந்த பகுதி மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக மாறுவதுடன், மாநில மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்பையும் வழங்கும்.

  இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

  ரூ.6406.04 கோடி

  குஜராத்தின் பெரும்பாலான பகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் சர்தார் சரோவர் அணை ரூ.6406.04 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது. இந்த அணை மூலம் வறட்சியான கட்ச், சவுராஷ்டிரா பகுதிகள் உள்பட 14.23 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுவதுடன், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களை சேர்ந்த 4 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகும்.

  இந்த அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் கொண்டு செல்வதற்காக நிலம் எதுவும் கையகப்படுத்தவில்லை. ஏனெனில் பூமிக்கடியில் அமைக்கப்பட்ட குழாய்கள் மூலமே தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது.

  2 மின் திட்டங்கள்

  இதைப்போல இந்த அணை நீரில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக 2 மின்திட்டங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் நாள்தோறும் 1450 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இதற்கு நீர் கொண்டு செல்லும் கால்வாய்களின் மேற்பகுதியிலும் சோலார் தகடுகள் பொருத்தி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த நீர் மின்திட்டங்கள் மூலம் குஜராத், மராட்டியம், மத்திய பிரதேச மாநிலங்கள் மின்சாரம் பெறுகின்றன.

  இந்த அணைக்கு பயன்படுத்தப்பட்ட காங்கிரீட்டின் அடிப்படையில் இது உலக அளவில் 3-வது பெரிய அணையாக கருதப்படுகிறது. இதற்கு பயன்படுத்திய காங்கிரீட்டை கொண்டு பூமத்திய ரேகைக்கு சமமான தொலைவுக்கு இரு மடங்கு சாலை போட முடியும். 121.92 மீட்டர் உயரமாக முதலில் கட்டப்பட்ட இந்த அணை தற்போது 138.68 மீட்டராக உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

  News