செட்டிகுளம்–வேப்பமூடு சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம் அதிகாரிகள் நேரில் ஆய்வு
Views - 47 Likes - 0 Liked
-
நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனையடுத்து, சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். இதைதொடர்ந்து, பழுதடைந்த சாலைகளை செப்பனிட வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. மேலும், இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களையும் அளித்தனர்.
இதனையடுத்து சாலைகளை சீரமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டு, ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. ஆனால் சாலை சீரமைப்பு வேலைகள் தான் நடந்தபாடில்லை. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள்.
இந்தநிலையில், தற்போது சாலைகளை படிப்படியாக சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ரூ.81 லட்சம் செலவில் செட்டிகுளத்தில் இருந்து வேப்பமூடு வரையிலான பொதுப்பணித்துறை அலுவலக சாலை சீரமைப்பு பணி நேற்று தொடங்கப்பட்டது. சாலை சீரமைப்பு பணிகளை கோட்ட பொறியாளர் சாந்தி, துணை பொறியாளர் கீதாகுமாரி, உதவி பொறியாளர் ஸ்ரீஜா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த பணிகளை 2 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாலை சீரமைப்பு பணிகளை தொடர்ந்து, செட்டிகுளத்திலிருந்து பொதுப்பணித்துறை அலுவலக சாலை வழியாக நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் வரும் வாகனங்கள் அனைத்தும் கலெக்டர் அலுவலகம், கோர்ட்டு ரோடு வழியாக அண்ணா பஸ் நிலையம் வரும்படி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ரூ.44 லட்சம் செலவில், பீச்ரோடு–மறவன்குடியிருப்பு சாலையும், ரூ.68 லட்சம் செலவில் பீச்ரோடு–வல்லன்குமாரன்விளை சாலையும் சீரமைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
News