கன்னியாகுமரியில் காந்தி அஸ்தி கட்டத்தில் அபூர்வ சூரிய ஒளி விழுந்தது
Views - 44 Likes - 0 Liked
-
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான நேற்று கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்தில் மரியாதை செலுத்துவதற்காக ஏராளமானவர்கள் குவிந்தனர். மகாத்மா காந்தியடிகளின் அஸ்தியை வைத்திருந்த அஸ்தி கட்டம் மற்றும் அவரது உருவப்படம் ஆகியவை அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
தமிழக அரசு சார்பில் குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் பங்கேற்று அஸ்தி கட்டத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விஜயகுமார் எம்.பி. உள்பட பல்வேறு அரசியல் பிரமுகர்களும், சுற்றுலா பயணிகளும் மரியாதை செலுத்தினர்.
அபூர்வ சூரிய ஒளி
காந்தி ஜெயந்தியன்று மதியம் காந்தி அஸ்தி கட்டத்தின் மீது அபூர்வமாக சூரிய ஒளி விழும் வகையில் காந்தி நினைவு மண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது.
கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் காந்தி மண்டபத்தில் காந்தி ஜெயந்தி நாளான நேற்று மதியம் 12 மணிக்கு, அஸ்தி கட்டத்தின் மீது அபூர்வ சூரிய ஒளி விழுந்தது. 10 நிமிடம் நேரம் மட்டும் இந்த சூரிய ஒளி விழுந்தது. அப்போது காந்தி மண்டப ஊழியர்கள் ஒரு துணியை அதன் மீது பிடித்து சூரிய ஒளியை காண்பித்தனர். அங்கு திரண்டு இருந்த சுற்றுலா பயணிகள் அதை பார்வையிட்டு வணங்கினர். செல்போன்களிலும் பலர் படம் பிடித்து மகிழ்ந்தனர்.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் தேச பக்தி பாடல்கள் பாடப்பட்டன. கூட்டு பிரார்த்தனையும் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.News