" “Not only must we be good, but we must also be good for something.” – Henry David Thoreau"

தமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றார்

Views - 45     Likes - 0     Liked


  • தமிழக கவர்னராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முடிவடைந்தது. இதையடுத்து மராட்டிய மாநில கவர்னராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி தமிழக பொறுப்பு கவர்னர் என்ற கூடுதல் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். இதற்கிடையே ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகம், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், சட்டமன்றத்தில் மெஜாரிட்டி நிரூபித்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் தமிழகத்துக்கு முழு நேர கவர்னரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
     
    இதைத்தொடர்ந்து அசாம் மாநில கவர்னராக பணி யாற்றிய பன்வாரிலால் புரோகித்தை தமிழகத்தின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடந்த 30-ந்தேதி உத்தரவிட்டார். அதன்படி, தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். சென்னை கிண்டி ராஜ்பவன் கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடக்கிறது. விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்து கொண்டு பன்வாரிலால் புரோகித்துக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பிற அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர். 
     
    முதல்-அமைச்சர் பழனிசாமி கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். விழாவில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார். பாரதீய ஜனதா கட்சியிலிருந்து தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் இல.கணேசன் கலந்துக் கொண்டனர். 
     
    தமிழகத்தின் புதிய கவர்னராக பதவி ஏற்க உள்ள பன்வாரிலால் புரோகித் மராட்டிய மாநிலம் விதர்பா பகுதியை சேர்ந்தவர். அவருக்கு 77 வயது ஆகிறது. எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார். தற்போது ‘தி ஹிதாவதா’ என்ற நாளிதழின் உரிமையாளர்-நிர்வாக ஆசிரியராகவும், நாக்பூரில் பொறியியல் கல்லூரி ஒன்றின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்திய நாடு சுதந்திரம் அடைந்தபோது தமிழக கவர்னராக லெப்டினெட் ஜெனரல் சர் ஆர்சிப்பால் எட்வர்ட் நை இருந்தார். அதன் பின்னர் கவர்னர், பொறுப்பு கவர்னர் என்று 28 பேர் தமிழக கவர்னர்களாக இருந்துள்ளனர். தற்போது தமிழகத்தின் 29-வது கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்று உள்ளார்.
    News