" “It always seems impossible until it is done.”-Nelson Mandela"

நாகர்கோவிலில் வீடு, வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்ட கலெக்டர்

Views - 71     Likes - 0     Liked


  • குமரி மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் அதிகாரிகளுடன் சென்று நேரடியாக ஆய்வு செய்து வருகிறார்.

    இதுபோல் நேற்று காலை சுமார் 6.45 மணி அளவில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நாகர்கோவில் டி.வி.டி. காலனி, செந்தூரான் நகர், காந்தி காலனி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் நகராட்சி கமி‌ஷனர் சரவணகுமார், நகர்நல அதிகாரி வினோத்ராஜா ஆகியோரும் வந்திருந்தனர்.

    கலெக்டர் மேற்கண்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று டெங்கு கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்கள் இருக்கிறதா?, தண்ணீர் தேங்கி கிடக்கிறதா?, தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டிகள், சிமெண்டு தொட்டிகளில் கொசுப்புழுக்கள் இருக்கிறதா? என்றும் ஆய்வு செய்தார். சுமார் 60–க்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த ஆய்வை மேற்கொண்டார்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பழைய இரும்புக்கடையில் தேங்கியிருந்த தண்ணீரில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கவும், உடனடியாக தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேபோல் ஒரு வீட்டில் கொசுப்புழு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானிடம், சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தினர். கலெக்டரின் இந்த நேரடி ஆய்வு அப்பகுதி மக்களிடையே திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பின்னர் கலெக்டர், நாகர்கோவில், அண்ணா விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்கள் தங்கும் விடுதி, விடுதி மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி (சின்டெக்ஸ்) மற்றும் கழிப்பறை ஆகிய இடங்களில் டெங்கு கொசு உள்ளதா என்பதை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

    குமரி மாவட்டத்தில், டெங்கு கொசு ஒழிப்பு பணியில், 1,200 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது, இப்பணியினை தீவிரப்படுத்திட மேலும் 300 களப்பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு 1,500–ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக தினந்தோறும் 14 அல்லது 15 நபர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். தற்போது இது வெகுவாக குறைந்துள்ளது.

    இதுவரை குமரி மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் உபயோகமற்ற பொருட்களை வைத்திருந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சுமார் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது, தண்ணீர் தேங்கியுள்ள பொருட்களை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து, கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமையில் தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்டல அலுவலர்களுடன் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    பின்னர் கலெக்டர் தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், முளகுமூடு கிராம நிர்வாக அலுவலக வளாகம் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் டெங்கு கொசு உள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.

    News