" “Not only must we be good, but we must also be good for something.” – Henry David Thoreau"

மக்கள் பணியில் 75 ஆண்டுகள் சென்னையில் 6-ந்தேதி நடைபெறுகிறது தினத்தந்தி பவள விழா

Views - 70     Likes - 0     Liked


 • ‘தினத்தந்தி’, 1942-ம் ஆண்டு இதே நாளில், ‘தந்தி’ என்ற பெயரில் மதுரையில் உதயமானது.

  ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் தொடங்கிய ‘தினத்தந்தி’ இந்தியாவின் நம்பர் 1 தமிழ் நாளிதழ் என்ற சிறப்புடன் திகழ்கிறது.

  தமிழகத்தில் 13 நகரங்களிலும், பிற மாநிலங்களில் புதுச்சேரி, பெங்களூரு, மும்பை நகரங்களிலும், வெளிநாட்டில் துபாயிலும் என 17 நகரங்களில் இருந்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது ‘தினத்தந்தி’.

  தமிழக மக்களின் வாழ்க் கையோடு 75 ஆண்டுகளாக இரண்டறக் கலந்துவிட்ட ‘தினத்தந்தி’, மக்கள் பணியில் 75 ஆண்டுகளை பூர்த்தி செய்து பவள விழாவை கொண்டாடுகிறது.

  பவள விழா சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா கலையரங்கத்தில் 6-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

  விழாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குவதுடன், பவள விழா மலரை வெளியிட்டு, விருதுகள் வழங்கி வாழ்த்தி பேசுகிறார்.

  ‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

  தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

  தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார்.

  விழாவில், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷத்துக்கு சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் சைக்கிளில் சென்று ‘தினத்தந்தி’யை விற்பனை செய்த வி.ஜி.சந்தோஷம், பிற்காலத்தில் பிரபல தொழில் அதிபராக உயர்ந்தவர். எனவே, அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

  ‘தினத்தந்தி’ சார்பில் ஆண்டுதோறும் சி.பா. ஆதித்தனார் இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது. மூத்த தமிழறிஞர் ஒருவருக்கு விருதுடன் ரூ.3 லட்சமும், சிறந்த இலக்கிய நூலுக்கு விருதுடன் ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது.

  இந்த ஆண்டு மூத்த தமிழறிஞர் விருதை ஈரோடு தமிழன்பனும், சிறந்த இலக்கிய நூலுக் கான பரிசை ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற புத்தகத்தை எழுதிய ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்புவும் பெறுகிறார்கள். விருது மற்றும் பரிசு தொகையை பிரதமர் நரேந்திர மோடி விழா மேடையில் வழங்குகிறார்.

  விழாவில், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சினிமா - விளையாட்டு பிரபலங் கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொள்ள இருக் கின்றனர்.

  மூத்த தமிழறிஞர் விருது பெறும் ஈரோடு தமிழன்பன், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், கல்லூரிப் பேராசிரியர் என பன்முகம் கொண்டவர். இயற்பெயர் ஜெகதீசன். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 28-9-1933 அன்று பிறந்தார். பெற்றோர்: செ.இரா. நடராசன், வள்ளியம்மாள்.

  ஆரம்பக் கல்வியையும், உயர்நிலைப்பள்ளி கல்வியையும் சொந்த ஊரில் பயின்றபின், கரந்தைப் புலவர் கல்லூரியில் சேர்ந்து தமிழ்ப் புலவர் பட்டம் பெற்றார். பிறகு, அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டயத் தேர்விலும், சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுநிலைத் தேர்விலும் வெற்றி பெற்றார். சென்னை பல் கலைக்கழகத்தில், “தனிப்பாடல் திரட்டு” பற்றி ஆய்வு செய்து, முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றார்.

  1959 முதல் 1970 வரை ஈரோட்டில் மதரசா இசுலாமியர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை தமிழாசிரியராக பணிபுரிந்தார். 1970 முதல் 1993 வரை சென்னை புதுக்கல்லூரியில், முதுநிலைத் தமிழ்த்துறையில் பணியாற்றினார்.

  அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு குடியரசு முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

  இயக்குனர் கே.பாலசந்தரின் “அச்சமில்லை அச்சமில்லை” உள்பட சில படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

  இவருடைய “வணக்கம் வள்ளுவ” கவிதை நூல், சாகித்திய அகாடமி விருது பெற்றதாகும்.

  “இலக்கியத்தில் மேலாண்மை” என்ற புத்தகத்துக்காக தினத்தந்தியின் இலக்கியப் பரிசை பெறும் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். மாவட்ட கலெக்டர் உள்பட பல உயர் பதவிகளை வகித்தவர். இலக்கியத்தில் மிகுந்த பற்றுதல் உள்ளவர்.

  இவருடைய சொந்த ஊர் சேலம். 1963 செப்டம்பர் 16-ந் தேதி பிறந்தார். பெற்றோர்: வெங்கடாசலம்-பேபி சரோஜா.

  ஆரம்பக் கல்வியை சேலத்தில் முடித்த பிறகு, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, இளம் அறிவியல் (வேளாண்மை) பட்டம் பெற்றார்.

  பிறகு எம்.ஏ. (ஆங்கிலம்), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.பி.ஏ. (நிதி மேலாண்மை) பட்டங்கள் பெற்றார். அடுத்து, மேலாண்மை, ஆங்கிலம் ஆகியவற்றில் முனைவர் பட்டம் பெற்றார். மேலாண்மையில் முதுமுனைவர் பட்டமும் பெற்றார்.

  1988-ல் ஐ.ஏ.எஸ். பட்டம் பெற்றார்.

  தமிழில் 56 நூல்களும், ஆங்கிலத்தில் 4 நூல்களும் எழுதியுள்ளார்.

  இவர் மனைவி பெயர் ராஜ்யஸ்ரீ. இந்த தம்பதிகளுக்கு அனுஷ்வர், அர்ச்சித் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். 

  News