" “Not only must we be good, but we must also be good for something.” – Henry David Thoreau"

பத்திரிகை சுதந்திரம் எப்போதும் மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் பிரதமர் மோடி வேண்டுகோள்

Views - 85     Likes - 0     Liked


 • நமது வரலாற்றைப் போலவே, அறிவுக்காக மக்கள் தேடி அலையும் நிலையும் பழையதாகிப் போனது. அறிவுப் பசியை தீர்ப்பதற்கு பத்திரிகை தொழில் உதவிசெய்கிறது. இன்று செய்திகளை மட்டும் பத்திரிகைகள் அளிக்கவில்லை. நம்மை சிந்திக்கத் தூண்டுவதோடு, உலகத்துக்கான புதிய ஜன்னலை திறந்து தருகின்றன. மீடியா என்பது சமுதாயத்தை மாற்றக்கூடியதாக உள்ளது. அதனால்தான் நாம், ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்று பத்திரிகைகளை வர்ணிக்கிறோம்.
   
  சமூகத்தின் மனசாட்சியாகவும், வாழ்க்கைக்கான முக்கிய சக்தியாகவும் பேனா இருப்பதை காட்டியதோடு, பேனாவில் சக்தியை நிரூபித்துக் காட்டியவர்களுடன் நான் இங்கு இன்று வீற்றிருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.
   
  காலனி ஆதிக்கம் இருந்த இருண்ட காலகட்டத்தில் ராஜாராம் மோகன்ராய் நடத்திய சம்பாத் கவ்முதி, லோக்மானிய திலகர் நடத்திய கேசரி, மகாத்மா காந்தி நடத்திய நவ்ஜீவன் ஆகிய பத்திரிகைகள், கலங்கரை விளக்கமாக ஒளிவீசி, இந்திய சுதந்திர போராட்டத்தை தூண்டின. வசதியான வாழ்க்கையைத் துறந்த பத்திரிகைத் துறை முன்னோடிகள், தேசம் முழுவதும் அந்த காலத்தில் இருந்தனர்.
   
  பத்திரிகைகள் மூலம் மக்களிடையே ஒருமித்த கருத்தையும், விழிப்பையும் தங்கள் பத்திரிகைகள் மூலம் ஏற்படுத்தினர். அந்த முன்னோடிகளின் உயரிய நோக்கம்தான், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பல்வேறு பத்திரிகைகள் உருவாகக் காரணமாக இருந்திருக்கலாம். பத்திரிகைகளின் மலர்ச்சி இன்றும் தொடர்கிறது.
   
  சமுதாயத்துக்கும், தேசத்துக்கும் தேவையான கடமைகளை அடுத்தடுத்து வரும் தலைமுறையினரும் செயல்படுத்தினர் என்பதை நாம் ஒருபோதும் மறுக்கக்கூடாது. அந்த வகையில்தான் நாம் சுதந்திரத்தை அடைந்தோம். சுதந்திரத்துக்குப் பிறகு மக்கள் மத்தியில் அவர்களுக்கான உரிமைகள் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
   
  ஆனால் நாளாக நாளாக, நமது ஒருமித்த மற்றும் தனிப்பட்ட கடமையை நாம் புறக்கணித்துவிட்டோம் என்பது துரதிருஷ்டவசமானது. இது சமுதாயத்தில் பல தீமைகளை சில விதங்களில் பங்களிக்கச் செய்துவிட்டது. தற்போதைய தேவை என்னவென்றால், ஈடுபாடு, பொறுப்பு மற்றும் விழிப்புணர்வு ஆகியவை பற்றிய வெகுஜன விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.
   
  உரிமைகளை அளிப்பதில் சமநிலை தேவை. நமது கல்வி முறை மூலமாகவும், அரசியல் தலைவர்களின் வழிகாட்டுதலோடும் இது அமையும். இங்கு மீடியாக்களின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் பெறுகிறது.
   
  சுதந்திர போராட்டத்தை பேச்சுகளை வடிவமைத்து வழங்கிய பத்திரிகைகளில் பெரும்பாலானவை வட்டார மொழிப் பத்திரிகைகளே. உண்மை என்னவென்றால், ஆங்கிலேய அரசு பயந்தது இந்திய வட்டார மொழிப் பத்திரிகைகளுக்குத்தான். வட்டார மொழிப் பத்திரிகைகளை அச்சுறுத்துவதற்காகத்தான் வட்டார மொழிப் பத்திரிகை சட்டம் 1878-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
   
  வெவ்வேறான பிரிவுகளைக் கொண்ட நமது நாட்டில், வட்டார மொழிப் பத்திரிகைகள், பிராந்திய மொழியில் வெளியாகும் பத்திரிகைகள் அப்போது போலவே இப்போதும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. மக்களால் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களின் தாய்மொழியில் தகவல்களை அவை வெளியிடுகின்றன. பல நேரங்களில் நலிவடைந்த பிரிவினர், சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்கு தகவல் அளித்து உதவுகின்றன.
   
  பத்திரிகைகளின் திறன், தாக்கம், பொறுப்பு ஆகியவற்றை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. மூலை முடுக்கெல்லாம் அரசின் கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களை எடுத்துச் செல்லும் தூதர்களாக பத்திரிகைகள் உள்ளன. மக்களின் உணர்வுகள், குமுறல்கள், எண்ணங்களை வெளிப்படுத்தும் விளக்குகளாக பத்திரிகைகள் திகழ்கின்றன.
   
  தற்போது துடிப்புள்ள அச்சு ஊடகங்களின் மத்தியில் அதிக அளவில் விற்பனையாகும் பத்திரிகைகளில், சில பத்திரிகைகள் பிராந்திய மொழியில் வெளியிடப்படுகின்றன. அவற்றில் தினத்தந்தியும் ஒன்று.
   
  தினமும் உலக அளவில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் அனைத்துமே பத்திரிகைகளில் வெளியிடப்படுவது குறித்து மக்கள் ஆச்சரியமடைவதை நான் கேட்டிருக்கிறேன். உலகத்தில் அதிக சம்பவங்கள் நடந்து வருவதை நாம் எல்லாருமே அறிவோம். அதில் எது முக்கியம் என்பதை தேர்வு செய்து முடிவு செய்வது பத்திரிகை ஆசிரியரின் பணியாகும். முதல் பக்கத்தில் எந்த செய்தியை வெளியிட வேண்டும், எந்த செய்திக்கு அதிக இடம் அளிக்க வேண்டும், எந்த தகவலை தள்ளிவிட வேண்டும் என்பதெல்லாம் ஆசிரியரே முடிவு செய்கிறார். இதனால் மிகப் பெரிய பொறுப்பு அவர்களுக்கு சுமையாக அமைந்துவிடுகிறது.
   
  தலையங்கம் எழுதும் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் எப்போதுமே மக்கள் நலனுக்காக விவேகத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும். அதுபோலவே, எழுத்து சுதந்திரம், எதை எழுதுவது என்பதை முடிவு செய்வது ஆகியவை உண்மைக்கு மாறாக இருக்கக்கூடாது. பிழையானதை எழுதுவது சுதந்திரம் ஆகாது. மகாத்மா காந்தி நமக்கு, “பத்திரிகைகள் 4-ம் தூணாக உள்ளன. அவை உண்மையிலேயே அதிகாரம் மிக்கவை. ஆனால் அதை தவறாக பயன்படுத்துவது குற்றம்” என்று கூறியிருக்கிறார்.
   
  பத்திரிகைகள் தனியாரால் நடத்தப்பட்டு வந்தாலும் அவை பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப சேவை அளிக்கின்றன. படை பலத்துடன் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதை விட, பத்திரிகைகள் அமைதியாக இருந்து கொண்டு சீர்திருத்தங்களை ஏற்படுத்திவிடுகின்றன என்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். எனவே பத்திரிகைகளுக்கு, நீதித்துறை போலவும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசைப் போலவும் சமுதாய பொறுப்பு அதிகம் உள்ளது.
   
  இதுபற்றி தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறும்போது, “நெறிமுறை தவிர்த்து உலகில் சிறந்தது வேறொன்றுமில்லை. நற்பெயரையும் செல்வத்தையும் அதுதான் ஒருவருக்கு அளிக்கின்றது” என்று கூறியிருக்கிறார்.
   
  மீடியாக்களில் தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. கிராமங்களில் கரும் பலகைகளில் அந்த நாளின் செய்திகளை எழுதி வைப்பது அந்த நாட்களில் வழக்கமாக இருந்தது. அவை மிகுந்த நம்பகத்தன்மையுடன் இருந்தன. தற்போது கரும்பலகையில் இருந்து ஆன்லைன் பலகைகளில் செய்திகளைக் காணும் மாற்றத்தை நமது மீடியாக்கள் உருவாக்கியுள்ளன.
   
  தகவல்களைப் பெறும் நமது மனப்பாங்கிலும் மாற்றங்கள் வந்துள்ளன. இன்று ஒவ்வொரு குடிமகனும் தனக்கு வரும் தகவல்களை பல்வேறு ஆதாரங்கள் மூலம் ஆய்வு செய்யவும், விவாதிக்கவும், சரிபார்க்கவும் முன்வருகிறான். எனவே மீடியாக்கள் தங்கள் மீதான மக்கள் நம்பிக்கையை பராமரிப்பதற்கு கூடுதல் முயற்சி எடுத்தாக வேண்டும். நம்பிக்கைக்கு உரிய மீடியாக்களுக்கு இடையே உள்ள போட்டியும், நமது ஜனநாயகத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லதுதான்.
   
  நம்பகத்தன்மை குறித்த புத்தாக்கம், நம்மை நாமே சுயபரிசோதனை செய்யச் செய்கிறது. மீடியாக்களுக்கு தேவையான மறுமலர்ச்சி, அவர்களின் சுயபரிசோதனையின் அடிப்படையில்தான் அமைகின்றன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். சுயபரிசோதனை செய்யும் நிலை, சில நிகழ்வுகளின்போது ஏற்பட்டுள்ளது. இது, நவம்பர் 26-ந் தேதியன்று மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின்போது நேரிட்டது. சுயபரிசோதனை அடிக்கடி நிகழ்வது அவசியம்.
   
  நமது மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், “நாம் மிகப் பெரிய தேசத்தை கொண்டவர்கள். நாம் வியக்கத் தக்க வெற்றிகளை அடைந்துள்ளோம். ஆனால் அவற்றையெல்லாம் நாம் ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
   
  பெரும்பாலான மீடியாக் கள், அரசியலையே மையமாக வைத்து சுழல்கின்றன. ஜனநாயகத்தில் அரசியல் பற்றி நீளமாக விவாதிக்கலாம். இந்தியாவில் அரசியல்வாதிகள் மட்டுமே இருக்கவில்லை. இங்கு 125 கோடி இந்தியர்கள் உள்ளனர். அரசியலையும் தாண்டி, மக்களைப் பற்றியும், அவர்களின் சாதனைகளைப் பற்றியும் மீடியாக்கள் கவனித்தால் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
   
  செல்போன் வைத்துள்ள ஒவ்வொருவரும் இந்த காலகட்டத்தில் உங்களின் நண்பர்களாக உள்ளனர். தனி நபர்களின் வெற்றித் தகவல்களை பகிர்ந்துகொள்வதிலும், வெளியிடுவதிலும் மக்களின் செய்திப் பணி மிக முக்கியமான கருவியாக உள்ளது. இது, பேரிடர் காலகட்டத்திலும், குழப்ப சூழ்நிலைகளிலும் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கும்.
   
  இயற்கை பேரிடர் காலத்தில் மீடியாக்கள் அந்த சம்பவத்தில் தங்களால் முடிந்த அளவு விவரங்களை சேகரித்துச் சொல்வது வழக்கம். இயற்கை பேரிடர் தற்போது உலக அளவில் நேரிட்டுக் கொண்டிருக்கிறது. நம் ஒவ்வொருவருக்கும் பருவநிலை மாற்றம் என்பது சவாலாக உருவெடுத்து வருகிறது. அதற்கு எதிராக மீடியாக்கள் போர்தொடுக்க ஆயத்தமாக இருக்கிறதா? அதுபற்றி ஒரு சிறிய இடத்தை அல்லது குறிப்பிட்ட நேரத்தை அர்ப்பணிக்க தயாரா? பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது பற்றி செய்தி வெளியிடவும், விவாதிக்கவும் முடியுமா?
   
  தூய்மை இந்தியா திட்டத்தை பொறுப்புடன் எடுத்துக்காட்டிய மீடியாக்களுக்கு நன்றி சொல்ல இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறேன். இந்த திட்டத்தை 2019-க்குள் சாதிக்க வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவும் அதையொட்டி வருகிறது. இந்த நேரத்தில் தூய்மை பற்றிய ஒருமித்த கருத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்கு சாதகமாக பங்களிப்பு செய்த மீடியாக்கள் என் இதயத்தை தொட்டன. இதில் இன்னும் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி நான் குறிப்பிட்டு இருக்கிறேன்.
   
  ஏக் பாரத்-ஸ்ரஷ்டா பாரத் (ஒரே பாரதம், உன்னத பாரதம்) திட்டத்திலும் மீடியாக்களின் பங்களிப்பு அவசியம். இதை ஒரு உதாரணம் மூலம் விளக்க முடியும். இதற்காக ஒவ்வொரு பத்திரிகையும் சில அங்குல இடத்தை ஒரு ஆண்டுக்கு ஒதுக்கலாம். அதில், எளிய வாக்கியங்களை அவர்கள் மொழியிலும், அதன் மொழியாக்கத்தையும் இடம் பெறச் செய்ய வேண்டும். ஒரு ஆண்டுக்குப் பிறகு, அதன் வாசகர் 365 எளிதான வாக்கியங்களை இந்திய மொழிகளில் கற்றிருப்பார்.
   
  பள்ளிகளிலும் தினமும் இதுபற்றி சில நிமிடங்கள் விவாதிக்கலாம். அதன் மூலம் குழந்தைகளுக்கும் நமது நாட்டின் பன்முகத்தன்மையின் உறுதியும், மகத்துவமும் புரியும். இது உன்னத நோக்கத்துக்கான சேவையாக மட்டுமல்லாமல், பத்திரிகையின் பலத்தையும் உயர்த்தும்.
   
  இவ்வாறு அவர் பேசினார். 

   

  News