நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு
Views - 37 Likes - 0 Liked
-
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுவதால் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மழை பெய்தது. அதன் பின்னர், அது வலு குறைந்து போனது. இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி தெற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் இருப்பதால் தென் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-
தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலைக்கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தின் கடலோர பகுதி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு சில முறை மிதமான மழை பெய்யும்.
வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த கடல் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் 1-ந் தேதி முதல் இன்று (நேற்று) வரை தமிழகத்தில் 27 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இது இயல்பை விட 21 சதவீதம் குறைவு.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பில் தலா 4 செ.மீ., நாகப்பட்டினம், வேதாரண்யத்தில் தலா 2 செ.மீ. மழை பெய்து உள்ளது.
சென்னையில் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
சென்னை எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், மாம்பலம், கிண்டி, குரோம்பேட்டை, பல்லாவரம், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, மூலக் கடை, அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர், சூளைமேடு, அசோக்பில்லர், சைதாப்பேட்டை, ஆர்.கே.நகர் உள்பட பல பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மாதவரம் உள்பட பல இடங்களிலும் அவ்வப்போது லேசான மழை பெய்தது.News