சாலை விரிவாக்க பணிக்காக டெரிக் சந்திப்பில் இருந்த இந்திரா காந்தி சிலை அகற்றம்
Views - 46 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலை வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் டெரிக் சந்திப்பில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி தற்போது நடந்து வருவதால் சாலை விரிவாக்க பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சிலை இருந்ததாக தெரிகிறது. இதனால் இந்திரா காந்தி சிலையை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்திரா காந்தி சிலையை அகற்றக் கூடாது என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் அளித்தனர்.
எனினும் சிலையை அகற்றினால் மட்டுமே சாலையை விரிவாக்கம் செய்ய முடியும் என்பதால் காங்கிரஸ் நிர்வாகிகளுடன், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, இந்திரா காந்தி சிலையை தற்போது உள்ள இடத்தில் இருந்து அகற்றி பூங்காவுக்கு நடுவில் வைப்பதாக அதிகாரிகள் கூறினர். இதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, டெரிக் சந்திப்பில் உள்ள இந்திரா காந்தி சிலையை சாலை விரிவாக்கப் பணிக்காக வேறு இடத்தில் மாற்றி நிறுவப்படும் என்று எழுத்துப்பூர்வமான கடிதத்தை அதிகாரிகள் அளித்தனர்.
இதனையடுத்து நேற்று மாலை இந்திரா காந்தி சிலை அகற்றப்பட்டது. தற்போது பூங்காவில் ஒரு பகுதியில் சிலை பத்திரமாக வைக்கப்பட்டு உள்ளது. சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்ததும் சிலை நிறுவப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News