கோட்டார் திருவிழா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை
Views - 57 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி, கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் ஆலயம் சந்திப்பு வரை ரோட்டு ஓரங்களில் தற்காலிகமாக பேன்சி கடைகள், மிட்டாய் கடைகள் உள்ளிட்ட பல கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாகரன் தலைமையில், நாகர்கோவில் நகர உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குமார பாண்டியன், சங்கரநாராயணன், அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி பிரவீன்ரெகு மற்றும் கிள்ளியூர் வட்டார அதிகாரி ரஞ்சித்குமார் ஆகியோர் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு உணவு பொருள்கள் விற்கப்படுகிறதா? என்றும், சுகாதாரமான முறையில் இனிப்பு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர்.
மேலும், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவு பொருள்களில் அவை தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் உணவு பொருள் உற்பத்தியாளர் முகவரி அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டவும், பலகாரங்களை மூடிவைத்து விற்பனை செய்யவேண்டும் என்றும், ஒருமுறை பலகாரங்கள் செய்ய பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என்றும் வியாபாரிகளுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.
News