ஹெல்மெட் சோதனை என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் ஓட்டி செல்பவர்களை போலீசார் தாக்குவதை தடுக்க வேண்டும்
Views - 35 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில், பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட காங்கிரசார் நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனித்தனியாக 2 மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:–
குமரி மாவட்டத்தில் ஹெல்மெட் சோதனை மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிகமாக நடந்து வருகிறது. ஹெல்மெட் சோதனை என்ற பெயரில் மோட்டார் சைக்கிளில் வருபவர்களை போலீசார் திடீரென கம்பால் தாக்குகிறார்கள். மேலும், திருடர்களை பிடிப்பது போல் பாய்கிறார்கள். இதனால் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் விபத்துக்குள்ளாவதும், படுகாயம் அடைவதும் தொடர் கதையாகியுள்ளது. இதை தடுக்க வேண்டும்
அதுமட்டும் அல்லாமல் வாகனம் ஓட்டி செல்லும் பொதுமக்களிடம் போலீசார் மிகவும் தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளும் பேசுகிறார்கள். எனவே இதை தடுக்க வாகன சோதனையை வரைமுறைப்படுத்த வேண்டும்.
நாகர்கோவில் ஒழுகினசேரி பழையாற்றின் அருகில் ஒரு மதுக்கடை உள்ளது. இந்த கடையின் அருகில் தான் பழையாற்றில் பெண்கள் குளிக்கிறார்கள். இங்கு சிவன் கோவில், கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் உள்ளதால் பெண்கள் அதிகமாக இந்த வழியில் செல்கிறார்கள்.
பள்ளிக்கு செல்லும் மாணவ–மாணவிகள் மாலையில் இந்த வழியாகத்தான் டியூசன் படிக்க செல்கிறார்கள். எனவே இங்கு மதுக்கடை இருப்பதால் பெண்கள் மற்றும் மாணவ–மாணவிக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், இந்த மதுக்கடையில் இருந்து திருட்டுத்தனமாகவும் மதுவிற்பனை செய்யப்படுகிறது. எனவே இந்த மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டு உள்ளது.
News