கடைசி மீனவரை மீட்கும் வரை கடலில் மாயமானவர்களை தேடும் பணி தொடரும் மத்திய மந்திரி உறுதி
Views - 36 Likes - 0 Liked
-
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை கடந்த 30-ந் தேதி ‘ஒகி’ புயல் தாக்கி கடுமையான சேதங்களை விளைவித்தது. இந்த பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் மாயமாகி விட்டனர். அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.புயல் தாக்கிய பகுதிகளை பார்வையிட்டு வரும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், மீனவர்களை தேடும் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். நேற்று அவர் கேரளாவின் பூந்துறை, விழிஞ்ஞம் உள்ளிட்ட கடலோர பகுதிகளை பார்வையிட்டார்.பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள விமானப்படை தொழில்நுட்ப பகுதியில் மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் புயல் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-‘ஒகி’ புயல் பாதிப்பால் பெண்கள் உள்ளிட்ட மீனவ மக்கள் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர். இந்த புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல்படை மற்றும் கடற்படை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மட்டுமின்றி போர்க்கப்பல்கள் கூட ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.கடலில் மாயமான கடைசி மீனவரும் பாதுகாப்பாக மீட்கப்படும் வரை இந்த தேடும் பணிகள் தொடரும். எவ்வளவு வீரியத்துடன் கடந்த 30-ந் தேதி இந்த பணிகள் தொடங்கப்பட்டதோ, அதே வீரியத்துடன் இது தொடர்ந்து நடைபெறும் என நான் உறுதியளிக்கிறேன்.மாயமான மீனவர்களை தேடும் பணியில் தங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து அவர்களும் தங்கள் உறவினர்களை கடலில் தேட அனுமதிக்கப்படுவர்.கடலில் மாயமான அனைத்து மீனவர்களும் பத்திரமாக வீடு திரும்புவர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஏற்கனவே இவ்வாறு காணாமல் போய் 15 நாட்களுக்குப்பின்னும் மீனவர்கள் பத்திரமாக திரும்பிய பல சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன. எனவே மாயமான மீனவர்கள் விஷயத்தில் நான் நம்பிக்கை இழக்கவில்லை.புயல் நிவாரண பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்குமாறு மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதை மத்திய அரசிடம் தெரிவிப்பதுடன், இந்த பிரச்சினையின் முக்கியத்துவத்தை உள்துறை மற்றும் வேளாண் மந்திரியிடமும் எடுத்துரைப்பேன்.இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.இதற்கிடையே கேரளாவின் கொச்சியில் இருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 15 நாட்களாக மாயமாகி இருந்த 9 மீனவர்களை லட்சத்தீவு அருகே இந்திய கடற்படையினர் நேற்று மீட்டனர். ஐ.என்.எஸ். கொல்கத்தா கப்பல் மூலம் மீட்கப்பட்ட அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களது படகிலேயே சொந்த ஊர் திரும்பி வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.News