மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நித்திரவிளையில் வியாபாரிகள் கடை அடைப்பு
Views - 34 Likes - 0 Liked
-
ஒகி‘ புயல் தாக்கிய போது கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான குமரி மாவட்ட மீனவர்கள் மாயமானார்கள். அவர்களில் பலர் கரை திரும்பினர்.
இதற்கிடையே மாயமான மீனவர்களில் சிலர் சிறு சிறு தீவுகளில் தங்கியிருக்கலாம் என உறவினர்கள் கூறுகிறார்கள். எனவே, மாயமான மீனவர்களை மீட்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
கடந்த 7–ந் தேதி குழித்துறை ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலில் மீனவர்கள் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து வந்த நாட்களில் குளச்சல், கன்னியாகுமரி, மணவாளக்குறிச்சி போன்ற பகுதிகளில் சாலை மறியல் நடந்தது. மேலும், முட்டம் உள்பட கடலோர கிராமங்களில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் மீனவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சின்னத்துறையில் கடந்த 9–ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கினர். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் பேரணியாக திரண்டு போராட்ட பந்தலுக்கு வந்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். இந்த போராட்டம் நேற்று 4–வது நாளாக தொடர்ந்தது.
இந்தநிலையில், மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகளும் போராட்டத்தில் குதித்தனர். அதன்படி, நேற்று நித்திரவிளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். நித்திரவிளை, சின்னத்துறை, காஞ்சாம்புறம் போன்ற பகுதிகளில் ஓட்டல்கள், பேக்கரி, டீக்கடை, ஜவுளிக்கடை போன்ற கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், தெருக்கள், வணிக வளாகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.News