" “Not only must we be good, but we must also be good for something.” – Henry David Thoreau"

கன்னியாகுமரியில் உருக்கமான சந்திப்பு ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய நரேந்திர மோடி

Views - 42     Likes - 0     Liked


 • கன்னியாகுமரி, 

  கடந்த மாதம் 30–ந் தேதி அதிகாலையில் வீசிய ‘ஒகி‘ புயல் குமரி மாவட்டத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இந்த புயலால் மீனவர்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

  கடலுக்குச் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் நூற்றுக்கணக்கானோர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது இன்னும் தெரியாமல் இருக்கிறது. இந்த புயலால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, ரப்பர், தென்னை, மரச்சீனி, மிளகு போன்ற பயிர்களும் நாசமாயின.

  எனவே ‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பிரதமர் நரேந்திரமோடி நேற்று கன்னியாகுமரி வந்தார்.

  முன்னதாக கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து லட்சத்தீவு சென்ற மோடி, அங்கு புயல் சேதங்களை பார்வையிட்டார். அதை தொடர்ந்து திருவனந்தபுரம் வந்த அவர், அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் நேற்று பிற்பகல் 2.20 மணிக்கு வந்திறங்கினார். அவருடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உடன் வந்தார்.

  அங்கிருந்து மோடி கார் மூலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்குள்ள கூட்ட அரங்கிற்கு சென்ற அவர், அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

  அதிகாரிகள் தரப்பில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, கவர்னரின் தனி செயலாளர் ராஜகோபால், முதன்மை செயலாளர்கள் ககன்தீப்சிங் பெடி, டி.கே.ராமச்சந்திரன், ராஜேந்திரகுமார், ஹர்மந்தர்சிங், குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், போலீஸ் சூப்பிரண்டு துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  ‘ஒகி‘ புயல் பாதிப்புகள் குறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டறிந்தார். அப்போது, புயல் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கி மனுவை எடப்பாடி பழனிசாமி, பிரதமரிடம் அளித்தார். அதில், புயல் பாதிப்புக்கு உள்ளான குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும், ஒகி புயல் பாதிப்புகள், சென்னை மற்றும் இதர கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நிரந்தரமாக சீரமைக்கும் பணிகளுக்கென 9,302 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

  அந்த கோரிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடி கவனமாக கேட்டுக்கொண்டார்.

  அதன்பிறகு அவர், புயலால் பாதித்த மீனவர்களை சந்தித்தார். நீரோடி, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, முள்ளூர்துறை, குளச்சல், மேல்மிடாலம், மிடாலம், மணக்குடி ஆகிய மீனவ கிராமங்களில் இருந்து வந்திருந்த பங்குத்தந்தையர்கள், மீனவர்கள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் என 34 பேர் மோடியை சந்தித்தனர்.

  அப்போது பிரதமர் நரேந்திரமோடி கூட்ட அரங்கின் மேடையை விட்டு இறங்கி வந்து, மீனவர்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் மத்தியில் நின்றவாறே சுமார் 10 நிமிடம் ‘ஒகி‘ புயல் பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார்.

  கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று புயலால் மாயமாகி, கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தங்களது உறவினர்களை மீட்டு கரை சேர்க்க வேண்டும் என்று கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோளை பிரதமரிடம் தெரிவித்தனர். அதை ஆங்கிலத்தில் அதிகாரிகளும், பங்குத்தந்தையர்களும் மொழிபெயர்த்து கூறினர்.

  மீனவர்கள் சார்பில் ‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மீனவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்கள் தெரிவித்த கோரிக்கைகளுக்கு பதில் அளித்த பேசிய பிரதமர் நரேந்திரமோடி கூறியதாவது:–

  புயலின் காரணமாக கடலில் மாயமான மீனவர்களை மீட்க கப்பல்படையும், கடலோர காவல்படையும் மேற்கொண்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் தொடரும். இதனை நாங்கள் நிறுத்தமாட்டோம். மீனவர்கள் அனைவரும் கரைசேரும் வரை இந்த மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

  ஒகி புயல் சேத விவர அறிக்கைகளை பெற்றபிறகு தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  அதன்பிறகு அதே அரங்கில், விவசாய பிரதிநிதிகளை பிரதமர் நரேந்திரமோடி தனியாக சந்தித்தார். மொத்தம் 32 பேர் இந்த சந்திப்பின்போது பங்கேற்றனர். அவர்களிடம் பிரதமர் புயல் பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார்.

  மேலும் விவசாய சங்க பிரதிநிதிகள் அவரிடம் கூறும்போது, “விவசாயிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத்தொகை மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே அதனை உயர்த்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மழைக் காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்க ஏதுவாக குஜராத்தைப் போன்று தடுப்பணைகள் கட்ட வேண்டும்“ என்பன போன்ற கோரிக்கைகளை கூறினர்.

  பின்னர் நரேந்திரமோடி, விவசாயிகளிடம் பேசும்போது, “பாதிப்புக்குள்ளான பயிர்களுக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டுத்தொகை செலுத்தி உள்ளீர்களா?“ என்று கேட்டதுடன், “குமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் வாழைக்காய் மற்றும் வாழைப்பழங்களை எங்கு சந்தைப்படுத்துகிறீர்கள்?“ என்றும் கேட்டார்.

  அதற்கு, “குறிப்பிட்ட அளவிலான விவசாயிகள் மட்டுமே, பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து, அதற்குரிய தொகையை செலுத்தி உள்ளனர். இந்த திட்டத்துக்கான காப்பீட்டுத்தொகை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் இணைய முடியாத நிலை உள்ளது. குமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் வாழைக்காய் மற்றும் வாழைப்பழங்களை தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் சந்தைப்படுத்துகிறோம்“ என்று கூறினர்.

  மீனவர்கள் மற்றும் விவசாயிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நிறைவு பெற்றதும், பா.ஜனதா நிர்வாகிகளை சந்தித்து சிறிது நேரம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜனதா மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி மற்றும் குமரி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  முன்னதாக பிரதமர் மோடி, கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய போது, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், போலீஸ் சூப்பிரண்டு துரை ஆகியோர் வரவேற்றனர்.

  வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்பு, குமரி மாவட்டத்தில் ஒகி புயல் பாதிப்பு தொடர்பாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை பிரதமர் நரேந்திரமோடி பார்வையிட்டார்.

  குமரியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, மாலை 4 மணி அளவில் கன்னியாகுமரியில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து பூந்துறை என்ற கிராமத்துக்கு சென்று புயலால் பாதிக்கப்பட்ட கேரள மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

  News