" Only I can change my life."

மாயமானவர்களை தேடும் பணியில் அலட்சியம் காட்டியதாக புகார்: மத்திய குழுவினருடன் மீனவர்கள் வாக்குவாதம்

Views - 75     Likes - 0     Liked


  • நாகர்கோவில், 

    குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். கடற்கரை கிராமமான தூத்தூருக்கு சென்ற அவர்கள், அங்குள்ள ஒரு கல்லூரி வளாகத்தில் மீனவ மக்களை சந்தித்தனர். அப்போது, கோரிக்கைகள் குறித்து பங்குதந்தையர்கள் மற்றும் மீனவர்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

    அப்போது பூத்துறை ஆலய பங்குதந்தை ஆன்றோ ராஜ் மத்திய குழுவினரிடம் கூறியதாவது:–

    குமரி மாவட்டத்தில் ஒகி புயலின் போது மீனவர்களுக்கு முன்எச்சரிக்கை அறிவிப்பை முறையாக அதிகாரிகள் கொடுக்கவில்லை. இதன் காரணமாக புயலுக்கு முன்பு கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

    மீனவ குடும்பத்தினர் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகிறார்கள். மாயமானவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மீனவர்கள், மத்திய குழுவினரிடம் தங்களது குறைகளை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாலும், முற்றுகையிட்டதாலும் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    மார்த்தாண்டன்துறையை சேர்ந்த கிறிஸ்துதாஸ் (வயது 62) என்பவர் கூறுகையில், “புயல் வீசிய உடனேயே மாயமான மீனவர்களை தேடி இருந்தால் அனைவரையும் மீட்டு இருக்கலாம். ஆனால், புயல் வந்து பல நாட்களுக்கு பின்னர்தான் அதிகாரிகள் கடலில் மீனவர்களை தேட ஆரம்பித்தனர். மீனவர்களை மீட்பதில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறினார். அப்போது, அவரது கருத்தை ஆதரித்து மேலும் பலரும் வாக்குவாதம் செய்தனர்.

    இதையடுத்து கிராம மக்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். மீனவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம் என்று அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து, அந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

    News