தியாகராயநகர் துரைசாமி சுரங்கப்பாதையில் சிக்கிய ஆம்னி பஸ்
Views - 44 Likes - 0 Liked
-
சென்னை,
கோவில்பட்டியில் இருந்து சென்னை மாம்பலத்தில் நடந்த ஒரு சடங்கு நிகழ்ச்சிக்கு 50 பேருடன் ஆம்னி பஸ் வந்தது. இந்த பஸ் தியாகராயர்நகர் துரைசாமி சுரங்கப்பாதையில் வந்தபோது பாலத்தில் சிக்கியது.
பயங்கர சத்தத்துடன் பஸ் சிக்கியதால் அதில் இருந்தவர்கள் பதறினர். பின்னர் அனைவரும் பஸ்சில் இருந்து வேகமாக கீழே இறங்கினர். டிரைவரும் உடனடியாக கீழே இறங்கினார். பஸ்சை மீட்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். ஆனால் அவர்களுடைய முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் தியாகராயநகர் பகுதி ஆம்னி பஸ் சிக்கியதால், போக்குவரத்து ஸ்தம்பித்து போனது. பின்னர் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. போக்குவரத்து உதவி கமிஷனர் ஸ்டீபன் உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பஸ்சை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அதன்படி பஸ்சின் டயர்களின் இருந்து காற்று இறக்கி விடப்பட்டது. இதனால் பஸ்சின் உயரம் சற்று குறைந்து, பாலத்தில் இருந்து பஸ் விலகியது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் போராடி போலீசார் பஸ்சை வெளியே எடுத்து வந்தனர்.
டிரைவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மாம்பலத்தில் நடந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தியாகராயர்நகர் திருப்பதி தேவஸ்தன கோவிலுக்கு சென்ற போது பஸ் சிக்கியது தெரியவந்தது. பின்னர் பஸ் கோவில்பட்டிக்கு புறப்பட்டு சென்றது.
News