" “Yesterday is history. Tomorrow is a mystery. .."

குமரி மாவட்ட பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 76 ஆயிரம்

Views - 47     Likes - 0     Liked


  • நாகர்கோவில், 

    தமிழகம் முழுவதும் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்- 2018 முடிவடைந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

    இதில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட, மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ பெற்றுக்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீக்கம்

    தமிழ்நாடு முழுவதும் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முடிவடைந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (அதாவது நேற்று) வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே வரைவு வாக்காளர் பட்டியல் 3-10-2017 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் மொத்தம் 15 லட்சத்து 12 ஆயிரத்து 841 வாக்காளர்கள் இருந்தனர்.

    அதைத்தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்தம்- 2018 மற்றும் சிறப்புப் பணி- 2018-ன் படி 15 ஆயிரத்து 640 வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் வாக்காளர் பட்டியலை செம்மைபடுத்தும் விதமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு- வீடாக கள ஆய்வு பணி மேற்கொண்டார்கள். அதன்அடிப்படையில் இறந்தவர்கள், இடம்பெயர்ந்த நபர்கள் ஆகிய நபர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலிருந்து நீக்கம் செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 52 ஆயிரத்து 241 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    மொத்த வாக்காளர்கள்

    இதனால் இறுதி வாக்காளர் பட்டியலில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 357 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 32 ஆயிரத்து 734 பெண் வாக்காளர்களும், 149 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 14 லட்சத்து 76 ஆயிரத்து 240 வாக்காளர்கள் உள்ளனர்.

    மேலும் 1-1-2018 அன்று 18 வயது பூர்த்தி அடைந்த நபர்கள் புதிய வாக்காளர்களாக சேர சம்பந்தப்பட்ட வட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட மையங்களில் தேவையான விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். பொது மக்களின் பார்வைக்காக இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வரையறுக்கப்பட்ட மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம் பெற்றவர்கள் அரசு இ-சேவை மையங்களில் இலவசமாக வண்ண அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம். திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நபர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி அரசு இ-சேவை மையங்களில் பெற்று கொள்ளலாம்.

    இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

    பெண் வாக்காளர்கள் குறைவு

    குமரி மாவட்டத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து, தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 36 ஆயிரத்து 601 வாக்காளர்கள் குறைந்துள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 10 ஆயிரத்து 623 பேர் குறைவாக உள்ளனர்.

    அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக கன்னியாகுமரி சட்டசபை தொகுதி திகழ்கிறது.

    நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, நாகர்கோவில் கோட்டாட்சியர் ஜானகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, தாசில்தார்கள் சஜீத் (அகஸ்தீஸ்வரம்), கண்ணன் (விளவங்கோடு), தேர்தல் தாசில்தார் சுப்பிரமணியன், தேர்தல் துணை தாசில்தார்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

    News