1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வினியோகம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
Views - 41 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது. நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நடைபெற்ற முகாமில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், விஜயகுமார் எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், ஒரு குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து விஜயகுமார் எம்.பி.யும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். அதன்பிறகு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பேசுகையில் கூறியதாவது:–
போலியோவை முற்றிலுமாக அகற்ற ஆண்டிற்கு 2 முறை சிறப்பு சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் முதற்கட்டமாக தற்போது நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் மருத்துவக்கல்லு£ரி ஆஸ்பத்திரி, அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மூலம் 1,236 இடங்களில் முகாம் நடத்தப்படுகிறது.
முகாமில் 4,944 பணியாளர்கள் (பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, சத்துணவு, நகராட்சி மற்றும் தன்னார்வலர்கள்) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், முகாம் நடைபெறும் இடங்களுக்கு குளிர்பதன முறையில் சொட்டு மருந்து கொண்டு செல்ல 233 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மக்கள்கூடும் இடங்களான ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள், பூம்புகார் படகுத்துறை மற்றும் காந்திமண்டபம் ஆகிய இடங்களில் 17 முகாம்களும், உரிய பஸ் வசதி இல்லாத மலைப்பகுதிகளில் 8 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த முதற்கட்ட முகாமில் 1 லட்சத்து 52 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வினியோகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.
முகாமில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் மதுசூதனன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி பேச்சியம்மாள், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் சகாயம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.News