" Love For All, Hatred For None."

அய்யாவழி மக்களின் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் சீமான்–என்.ஆர்.தனபாலன் பங்கேற்பு

Views - 78     Likes - 0     Liked


  • தென்தாமரைகுளம்,

    கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டரின் தலைமை பதி உள்ளது. கடந்த 4–ந்தேதி இங்கு அய்யா வைகுண்டர் அவதார தின விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் இந்து அறநிலையத்துறை அதிகாரி தலையிட்டதை கண்டிப்பதாக கூறியும், அய்யாவழி மக்களின் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும் நேற்று காலையில் சாமிதோப்பு தலைமை பதி முன்பு கலையரங்கத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார்.

    சாமிதோப்பு பதி நிர்வாகிகள் பால ஜனாதிபதி, பாலலோகாதிபதி, பையன் ஆனந்த், அய்யா வைகுண்டர் அறநிலைய பரிபாலன அறக்கட்டளை நிர்வாகி ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் என்.ஆர்.தனபாலன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எம்.எல்.ஏ.க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சுரேஷ்ராஜன், ஆஸ்டின், முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் என்.ஆர்.தனபாலன் பேசியதாவது:–

    அய்யாவழியில் மட்டுமே முழுக்க முழுக்க தமிழில் வழிபாடு நடைபெறுகிறது. அய்யாவழி கோவில்களில் கருவறை வரை பெண்கள் செல்ல அனுமதி உண்டு. இதுதான் அய்யாவழியின் சிறப்பு.

    அறநிலையத்துறை அதிகாரிகள் சாமிதோப்பு தலைமை பதியை கையகப்படுத்த நினைத்தால் சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் பெரும் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு என்.ஆர்.தனபாலன் பேசினார்.

    பாலபிரஜாபதி அடிகளார் பேசும் போது, “எங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அய்யாவழி மக்களை திரட்டி போராட்டம் வாரந்தோறும் நடத்த உள்ளோம். வருகிற ஞாயிற்றுக்கிழமை சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அய்யாவழி மக்களை திரட்டி சேலத்தில் போராட்டம் நடத்தப்படும். இதே போல் இனி வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் போராட்டம் வெவ்வேறு இடங்களில் நடைபெறும்“ என்றார்.

    போராட்டத்தில் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் “அய்யாவழி என்பது தனி வழிபாட்டு முறையை கொண்டது. மக்களை தலை நிமிர்ந்து நடக்க வைப்பதற்காக அய்யா கொண்டு வந்த அன்புவழி இது. எனவே அய்யா வழியை தனி மதமாக அறிவிக்க வேண்டும்“ என்று கூறினார்.

    உண்ணாவிரத போராட்டத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், சென்னையில் இருந்தும் வந்த அய்யாவழி பக்தர்கள், நாடார் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், கேரளாவில் உள்ள நாடார் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

     

    News