திருவட்டார்,
இரவிபுதூர்கடை அருகே பள்ளியாடியில் பழையபள்ளி திருத்தலம் அமைந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த திருத்தலம் அன்று முதல் இன்று வரை மனித நேயத்துக்கும், மத நல்லிணக்கத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இங்கு இந்துக்கள் சூடம் ஏற்றி வழிபடுவார்கள். கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்வார்கள். முஸ்லிம்கள் தங்களுக்கு ஏற்ற முறையில் வழிபாடு நடத்துவார்கள்.
இங்கு ஆண்டு தோறும் சமபந்தி விருந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சமபந்தி விருந்து நேற்று நடந்தது.
முன்னதாக நேற்று முன்தினம் சர்வமத பிரார்த்தனை நடந்தது. இதில் பள்ளியாடி பங்குத்தந்தை பெனடிட் அனலின், வாழும் கலை அமைப்பை சேர்ந்த மணிகண்டன், இனயம் முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்த முகமது ஆகியோர் கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினர். சிறப்பு விருந்தினராக வள்ளலார் பேரவை சிவகுமார் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில், கவிஞர் ராஜேந்திரன், பல்சமய உரையாடல் குழுவைச் சேர்ந்த உஷா, வனஜ குமாரி, சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நேற்று காலை 10 மணிக்கு சமபந்தி விருந்து தொடங்கியது. நிகழ்ச்சியை பள்ளியாடி இயேசுவின் திருஇருதய ஆலய பங்குத்தந்தை பெனடிட் அனலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சாதி, மத வேறுபாடின்றி பொதுமக்கள் உணவு உண்டனர்.
இந்த விருந்துக்கு 150 மூடை அரிசி, ரூ. 4 லட்சத்திற்கு மிளகு, கொத்தமல்லி, சீரகம் போன்ற மசாலா பொருட்கள், ரூ. 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கு காய்கறிகள் பயன்படுத்தப்பட்டது.
இந்த விழாவில் குமரி மாவட்டம் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியாடி பழையபள்ளி அறக்கட்டளை தலைவர் பால்ராஜ், பொது செயலாளர் எம்.எஸ்.குமார், துணை தலைவர் குமேஷ், பொருளாளர் சுந்தர் ராஜ், செயலாளர்கள் அய்யப்பன், சசிகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.