வடசேரி கனகமூலம் சந்தையில் ஆபத்தான நிலையில் இருந்த 73 கடைகள் இடிப்பு
Views - 51 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி கட்டிடங்கள் வாடகை மற்றும் குத்தகையின் அடிப்படையில் வணிகர்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. இதில் வடசேரி கனகமூலம் சந்தை நயினார் கட்டிட வளாகத்தில் இருந்த 73 நகராட்சி கடைகள் பொதுமக்களின் உயிர்க்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் மோசமான நிலையில் இருந்தது. இந்த கடைகளை இடித்து அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகள் முடிவுசெய்தனர்.
அதன்படி, 30–ந்தேதிக்குள்(நேற்றுமுன்தினம்) கடையை காலிசெய்து தருமாறு சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. உடனே வியாபாரிகள் கடைகளை காலி செய்தனர்.
இதனைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஆபத்தான நிலையில் இருந்த 73 கடைகளும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் நேற்று இடித்து அகற்றப்பட்டன.
இதுபோல், குத்தகை காலம் முடிந்த நிலையில் கடையின் உரிமையை அனுபவித்து வந்த கடைகாரர்களுக்கும் கடையை காலி செய்யவதற்கான எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும், ஒருசிலர் கடையை காலிசெய்யாமல் தொடர்ந்து அனுபவித்து வந்ததாக தெரிகிறது.
எனவே நகராட்சி ஆணையர் உத்தரவின்படி, வருவாய் அதிகாரி குமார்சிங் தலைமையில், நகரமைப்பு அலுவலர் கெபின் ஜாய், வருவாய் ஆய்வாளர்கள் முருகன், ஏ.முருகன், சுப்பையன், இசக்கி சரவணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பகவதிபெருமாள், மாதேவன்பிள்ளை ஆகியோர் அடங்கிய குழுவினர் குத்தகை காலம் முடிந்த கடைகளுக்கு பூட்டி ‘சீல்‘ வைத்தனர்.
அதன்படி அண்ணா பஸ் நிலையத்தில் 4 கடைகளுக்கும், பெதஸ்தா வணிக வளாக கட்டிடத்தில் 20 கடைகளுக்கும் ‘சீல்‘ வைக்கப்பட்டன. இந்த கடைகளில் இருந்த பொருட்களை நகராட்சி கையகப்படுத்தியது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:–
குத்தகை காலம் முடிந்த 24 கடைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளுக்கும், ஏலம் போகாத நிலையில் உள்ள மற்ற கடைகளுக்கும் வருகிற 4–ந்தேதி ஏலம் நடைபெறும்.
வடசேரியில் 73 கடைகள் இடித்து அகற்றப்பட்டதை தொடர்ந்து அங்கு சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.News