நாய் பண்ணையை அகற்ற வேண்டும் கலெக்டரிடம், பொதுமக்கள் மனு
Views - 67 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று வழக்கம்போல் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அந்த வகையில் மொத்தம் 284 மனுக்கள் பெறப்பட்டன.
அப்போது ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்க நிறுவன தலைவர் ஜாண் விக்டர்தாஸ் தலைமையில் ஈசாந்திமங்கலம் அண்ணா காலனியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தோவாளை தாலுகாவுக்குட்பட்ட ஈசாந்திமங்கலம் அண்ணாகாலனியில் சுமார் 110 வீடுகள் உள்ளன. இங்கு சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் நாய் பண்ணை வைத்திருக்கிறார். இதற்காக 2 வீடுகளை இடித்துள்ளார். நாய் பண்ணை இருப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக 2 முறை மனு அளித்திருக்கிறோம். ஆனாலும் நாய் பண்ணை இன்னும் அகற்றப்படவில்லை.
எனவே நாய் பண்ணையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே 2 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அண்ணாகாலனி மக்கள் தங்களது ரேஷன் கார்டை கலெக்டரிடம் ஒப்படைக்க முடிவு செய்து அனைவரும் தங்களது ரேஷன் கார்டுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பிரச்சினை தொடர்பாக உடனே நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதால் அவர்கள் ரேஷன் கார்டை கலெக்டரிடம் கொடுக்காமல் திரும்ப கொண்டு சென்றனர்.
அதைத் தொடர்ந்து ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் அளித்த மனுவில், ‘மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை பார்த்து வந்தோம். ஆனால் தற்போது எங்களுக்கு எந்த பணியும் வழங்கப்படுவது இல்லை. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து தொடர்ந்து வேலை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.
இவர்கள் மனு அளிப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.News