நிர்மலா தேவிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்யக்கோரி இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
Views - 58 Likes - 0 Liked
-
சென்னை,
அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை வற்புறுத்தியாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.
இதில் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்யக்கோரி இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் வாசல் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இச்சங்கத்தின் மாநில செயலாளர் உச்சி மாகாளி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்துரு, மாவட்ட செயலாளர் நிரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
முன்னதாக உச்சி மாகாளி நிருபர்களிடம் கூறியதாவது:-
பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பலியாக்க முயற்சி செய்தது கண்டிக்கத்தக்கது. அவருக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும், அவர் கவர்னர் மாளிகைக்கு அடிக்கடி வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. எனவே, நிர்மலா தேவிக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைதுசெய்யவேண்டும்.
தமிழ்நாட்டுக்காரர்களை துணைவேந்தர்களாக கவர்னர் நியமிக்காமல் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களை நியமித்து உள்ளார். இசைப்பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக கேரளாவைச்சேர்ந்த பிரமிளா குருமூர்த்தி, தமிழ்நாடு அம்பேத்கர் சட்டபல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக ஆந்திராவை சேர்ந்த தம்ம சூரிய நாராயண சாஸ்திரி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகத்தை சேர்ந்த சுரப்பா ஆகியோரை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமித்து உள்ளார்.
தமிழகத்தில் தலை சிறந்த கல்வியாளர்கள் இருக்கும்போது வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களை துணைவேந்தர்களாக நியமித்ததை திரும்ப பெறவேண்டும்.
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 6 பல்கலைக்கழகங்கள் நிதி சார் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டு உள்ளது. அதன் காரணமாக பல்கலைக்கழக மானியம் கிடைக்காது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.News