நாகர்கோவிலில் தி.மு.க.வினர் ஊர்வலம்- சாலை மறியல் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 119 பேர் கைது
Views - 52 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்த சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தெளிவான முடிவை தமிழக முதல்-அமைச்சர் அறிவிக்க வலியுறுத்தியும், இதற்காக போராட்டம் நடத்திய தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை மதுராந்தகத்தில் போலீசார் நேற்று கைது செய்ததை கண்டித்தும், நேற்று நாகர்கோவிலில் தி.மு.க. சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
முன்னதாக நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திரண்டிருந்த தி.மு.க.வினர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலமாக வடசேரி அண்ணா சிலைக்கு புறப்பட்டனர். இதில் ஆஸ்டின் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் கேட்சன், தில்லைச்செல்வம், ஹெலன்டேவிட்சன், ஷேக்தாவூது, பெஞ்சமின், ஜோசப்ராஜ், சாய்ராம், சற்குரு கண்ணன், வக்கீல் உதயகுமார், எம்.ஜே.ராஜன், நாஞ்சில் மணி உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, அணிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் அவர்களை ஒழுகினசேரி சந்திப்பு பகுதியில் வழிமறித்து நிறுத்தினர். இதையடுத்து சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலமாக சென்ற தி.மு.க.வினர் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 119 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 6 பேர் பெண்கள் ஆவர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் வாகனங்களில் ஏற்றி வடசேரி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.News