" “The best preparation for tomorrow is doing your best today.”"

நாகர்கோவிலில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் கோர்ட்டு பணிகளையும் புறக்கணித்தனர்

Views - 76     Likes - 0     Liked


  • நாகர்கோவில், 

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், துப்பாக்கி சூடு மற்றும் தடியடியால் 13 பேர் பலியான சம்பவத்துக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூடி, தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் கூட்டு நடவடிக்கைக்குழு முடிவின்படி குமரி மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு பணி புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவிலில் வக்கீல்கள் நேற்று ஒரு நாள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து, கோர்ட்டு முன்புறம் உள்ள சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் ஜோஸ் பெனடிக்ட் தலைமை தாங்கி பேசினார். சங்க செயலாளர் பிரதாப், முன்னாள் தலைவர்கள் மகேஷ், அசோக்பத்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் சங்க முன்னாள் தலைவர்கள் உதயகுமார், பாலஜனாதிபதி, மரிய ஸ்டீபன், ராஜகுஞ்சரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வக்கீல்கள் கோர்ட்டு முன்புறம் உள்ள சாலையை மறித்து நின்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. ஆர்ப்பாட்டம் முடிந்தபிறகுதான் அந்த சாலையில் மீண்டும் போக்குவரத்து சீரானது.

    இதேபோல் பூதப்பாண்டி, இரணியல், பத்மநாபபுரம், குழித்துறை வக்கீல் சங்கங்களின் சார்பிலும் நேற்று கோர்ட்டு பணி புறக்கணிப்பு போராட்டம் மற்றும் அந்தந்த கோர்ட்டுகள் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றதாகவும், இந்த போராட்டங்களில் மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் வக்கீல்கள் பங்கேற்றதாகவும் நாகர்கோவில் வக்கீல் சங்க செயலாளர் பிரதாப் தெரிவித்தார்.
     
    News