தூத்துக்குடிக்கு சென்ற ரஜினிகாந்தை வழி அனுப்ப விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்கள் பயணிகள் அவதி
Views - 43 Likes - 0 Liked
-
ஆலந்தூர்,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த், நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.
நடிகர் ரஜினிகாந்தை வழி அனுப்பிவைப்பதற்காக அவருடைய ரசிகர்கள் 300–க்கும் மேற்பட்டவர்கள் சென்னை விமான நிலையத்துக்கு காலை முதலே வரத்தொடங்கினார்கள். மீனம்பாக்கம் உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் உள்ள 1–வது நுழைவு வாயில் வழியாக அவர் செல்ல வேண்டும் என்பதால் அந்த பகுதி முழுவதும் ரசிகர்கள் குவிந்தனர்.
இதனால் அந்த வழியாக மற்ற பயணிகள், விமான நிலையத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. முக்கிய பிரமுகர்கள் வந்தாலும் நுழைவு பகுதி அருகே யாரையும் மத்திய தொழிற்படை போலீசார் அனுமதித்தது கிடையாது.
ஆனால் ரஜினி ரசிகர்கள் அந்த பகுதி முழுவதும் சூழ்ந்து கொண்டதால் அவர்களை மத்திய தொழிற்படை போலீசார் பயணிகள் செல்லும் வகையில் ஒதுங்கி நிற்குமாறு கேட்டு கொண்டனர். ஆனால் யாரும் ஒதுங்காததால் பயணிகள் 2–வது நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் நடிகர் ரஜினிகாந்த் காரில் சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார். அங்கிருந்து விமான நிலையத்துக்குள் செல்லும் போது ரசிகர்கள் கூட்டத்துக்குள் சிக்கிக்கொண்டார். இதையடுத்து மத்திய தொழிற்படை போலீசார் மற்றும் விமான நிலைய போலீசார் ரஜினிகாந்தை பத்திரமாக விமான நிலையம் உள்ளே அழைத்துச்சென்றனர்.
News