வில்லுக்குறி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
Views - 46 Likes - 0 Liked
-
அழகியமண்டபம்,
வில்லுக்குறி அருகே மூலச்சன்விளை, நுள்ளிவிளை பகுதியில் சுமார் 500–க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.
இப்பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக சீரான முறையில் குடிநீர் வினியோகம் வழங்கப்படவில்லை. மேலும், குடிநீர் தொட்டியில் பல இடங்களில் பழுது ஏற்பட்டதால் குடிதண்ணீர் வீணாக வெளியேறியது. இதன்காரணமாக குடிநீர் வினியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை மூலச்சன்விளை, நுள்ளிவிளை பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் மூலச்சன்விளை சந்திப்பில் ஒன்று திரண்டனர். பின்னர், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பெண்கள் கையில் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்தவாறு கோஷங்களை எழுப்பினார்கள். மேலும், அவர்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் நடைபெற அதிகாரிகள் நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை எடுத்தால்தான் மறியலை கைவிடுவோம் என்று கூறினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் உயர் அதிகாரிகளுக்கும், இரணியல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைதொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.News