" “A positive mindset brings positive things.”"

நாகர்கோவில் அனந்தன் குளத்தில் படகு போட்டி விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார்

Views - 108     Likes - 0     Liked


 • நாகர்கோவில்,

  குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் குமரித்திருவிழா கன்னியாகுமரி கடற்கரை சாலையில் காட்சி கோபுரம் எதிரே உள்ள பூம்புகார் கண்காட்சி திடலில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை விழா கொண்டாடப்படுகிறது.

  இந்த நிலையில் குமரித்திருவிழாவின் 2-வது நாளான நேற்று நாகர்கோவில் அனந்தன் குளத்தில் படகு போட்டி நடைபெற்றது. போட்டிக்கு மாவட்ட சுற்றுலா அதிகாரி நெல்சன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்.பி. பங்கேற்று போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  போட்டியானது குளத்தின் குறிப்பிட்ட இடம் வரை நடந்தது. அதாவது ஒரு படகில் சிலர் கொடியுடன் குளத்தின் ஒரு பகுதியில் நின்றார்கள். போட்டியாளர்கள் படகு தளத்தில் இருந்து புறப்பட்டு கொடியுடன் நின்ற படகை ஒரு முறை சுற்றிய பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்தை சென்றடைய வேண்டும். இதுவே போட்டியின் இலக்காக இருந்தது. இந்த போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன் குழுவினரும் ஒரு மிதவை படகு மூலமாக பேட்டியில் பங்கேற்றனர். போட்டியை அப்பகுதி மக்களும் குளத்தின் கரையில் திரண்டு நின்று கண்டு ரசித்தனர்.

  படகு போட்டியில் முதல் பரிசாக ரூ.5,001, 2-வது பரிசாக ரூ.3,001 மற்றும் 3-வது பரிசாக ரூ.2,001 வழங்கப்பட உள்ளது. இந்த பரிசானது குமரித்திருவிழாவின் நிறைவு நாள் அன்று வழங்கப்படும். பரிசு தொகையை விஜயகுமார் எம்.பி. வழங்க உள்ளார்.

  படகு போட்டியை தொடங்கி வைத்த பிறகு விஜயகுமார் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  குமரி மாவட்டத்தில் சுற்றுலாத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சாமிதோப்பு அருகே விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடக்கின்றன. தற்போது ஆய்வுப் பணிகள் முடிவடைந்துள்ளன. எத்தனை விமானங்கள் வரமுடியும் என்பன பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  கன்னியாகுமரியில் மட்டுமே 3 கடல்கள் சந்திக்கின்றன. எனவே கன்னியாகுமரியை 8-வது உலக அதிசயமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். இதுபற்றி பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறேன். மத்திய அரசிடமும் வலியுறுத்தி உள்ளேன்.

  கன்னியாகுமரியை இன்னும் மேம்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. அதில் ஒரு கட்டமாக குப்பைகள் மற்றும் சாலையோரம் குவியும் மணலை உடனுக்குடன் அப்புறப்படுத்த நவீன எந்திரங்கள் வாங்கப்பட உள்ளன. இதே போல நாகர்கோவில் நகராட்சிக்கும் ஒரு நவீன எந்திரம் வரவழைக்கப்பட இருக்கிறது. இந்த எந்திரங்கள் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும். மேலும் கணபதிபுரம் கடற்கரையை மேம்படுத்தவும் பணிகள் நடக்கின்றன.

  அனந்தன்குளத்தில் ஏராளமானோர் படகு சவாரி செய்கிறார்கள். எனினும் குழந்தைகளை கவரும் வகையில் கூடுதலாக 10 படகுகள் வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மணக்குடி காயலிலும் படகு சவாரி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இளைஞர்களை மகிழ்விக்கும் வகையில் உதயகிரி கோட்டையில் ரூ.1 கோடி செலவில் மலையேறும் பயிற்சி செய்வதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதற்காக முதற்கட்டமாக ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

  நாகர்கோவில் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை. எனினும் மேடான பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் சீராக இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இதை போக்க தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

  விழாவில் அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானசேகர், ஜெயலலிதா பேரவை தலைவர் கனகராஜ், நகர தலைவர் நாஞ்சில் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  குமரித்திருவிழாவின் 3-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு பாரம்பரிய உணவுத்திருவிழா நடைபெற உள்ளது. தொடர்ந்து 12 மணிக்கு கொழு கொழு குழந்தை போட்டி, மதியம் 1 மணிக்கு ஜிம்ளாமேளம், 2 மணிக்கு நாய்கள் கண்காட்சி ஆகியவை நடக்கின்றன.

  மாலை 5 மணிக்கு பல்சுவை நிகழ்ச்சிகள், 6 மணிக்கு பரதநாட்டியம், இரவு 7 மணிக்கு பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம் மற்றும் காவடியாட்டம், கேரள திருவாதிரை களி நடனம், ஆதிவாசி நடனம், கர்நாடக வீரகாசி நடனம், தெலுங்கானா மாநில மாதுரி, லம்பாடி மற்றும் திம்ஸா நடனம், 8 மணிக்கு இசை நிகழ்ச்சி போன்றவை நடைபெற உள்ளன. பின்னர் 9 மணிக்கு படகோட்டி படம் திரையிடப்படுகிறது.

  News