அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் போக்குவரத்து தொழிலாளர்கள் பஸ்களை இயக்க மறுத்து போராட்டம்
Views - 41 Likes - 0 Liked
-
குழித்துறை,
மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான மினி பஸ்களும், வேன்களும் இயங்கி வருகின்றன. இவை அரசு பஸ்களுடன் போட்டி போட்டு பயணிகளை ஏற்றி செல்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால், அரசு பஸ் டிரைவர்களுக்கும், தனியார் வாகன ஓட்டிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அருமனையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்த அரசு பஸ் டிரைவருக்கும், ஒரு வேன் டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வேன் டிரைவர் உள்பட 10 பேர் கொண்ட கும்பல் அரசு பஸ் டிரைவரை வழிமறித்து தாக்கியது. இதனால், ஆத்திரமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை இயக்க மறுத்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்தநிலையில், பயணிகளை ஏற்றுவது தொடர்பாக மீண்டும் ஒரு அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
தாக்குதல்
குளச்சலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி நேற்று காலையில் ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை பாகோடு பகுதியை சேர்ந்த அஜின் (வயது33) என்பவர் ஓட்டி சென்றார். பள்ளியாடி வாகவிளை பஸ் நிறுத்தத்தில் சென்ற போது, ஒரு மினி பஸ் அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது. அப்போது, அரசு பஸ் டிரைவர் அஜின், மினி பஸ்சை முந்தி சென்று முன்னால் பஸ்சை நிறுத்தினார்.
இதனால், ஆத்திரமடைந்த மினி பஸ் டிரைவர் இறங்கி சென்று, அஜினிடம் தகராறு செய்தார். அத்துடன் அருகில் கிடந்த கம்பியால் அஜினை தாக்கினார். இதை பார்த்த பயணிகள் சத்தம் போட்டனர். உடனே, அவர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
2 மினி பஸ்கள் பறிமுதல்
இதையடுத்து காயமடைந்த அஜின், குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், அந்த பகுதியில் ரோந்து சென்று தடம் மாறி இயங்கிய 2 மினி பஸ்களை பறிமுதல் செய்தனர். ஆனால், அரசு பஸ் டிரைவரை தாக்கிய மினி பஸ் டிரைவர், வாகனத்துடன் தலைமறைவானார்.
போராட்டம்
இந்தநிலையில், அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மார்த்தாண்டம் போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிலாளர்கள் பஸ்களை இயக்க மறுத்து திடீரென போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் அரசு பஸ் டிரைவரை தாக்கிய மினி பஸ் டிரைவரை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனால், மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில், அருமனை, குலசேகரம் போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதையடுத்து பயணிகள் அவதியடைந்தனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் அங்கு சென்று, போக்குவரத்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மினி பஸ் டிரைவரை கைது செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த போராட்டத்தால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.News