" “May you live all the days of your life.” – Jonathan Swift."

குமரி மாவட்டத்தில் மழை: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு

Views - 50     Likes - 0     Liked


  • நாகர்கோவில், 

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக தூறலாகவே பெய்து வந்த மழை நேற்று முன்தினம் இரவு பலத்த மழையாக பெய்தது. மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மழை பெய்தபோது பலத்த காற்றும் வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.

    நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் சாரலாக பெய்த மழை சற்று நேரம் கழித்து கொட்டி தீர்த்தது. அதன்பிறகு பகல் முழுவதும் சூரிய வெளிச்சம் தெரியாத அளவுக்கு வானில் கருமேகங்கள் திரண்டு இருந்தன. மழை விட்டு, விட்டு பெய்துகொண்டே இருந்தது.

    தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கோதையாறு மின் உற்பத்தி நிலைய தடுப்பணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக மோதிரமலைக்கும், குற்றியாருக்கும் இடையேயான ஆற்றுப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. இதனால் அங்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    நாகர்கோவில்- 14.2, பூதப்பாண்டி- 12.2, களியல்- 6.2, கன்னிமார்- 2.6, கொட்டாரம்- 11.6, குழித்துறை- 27, மயிலாடி- 6.6, புத்தன்அணை- 14.2, சுருளோடு- 18.4, தக்கலை- 18, குளச்சல்- 9.6, பாலமோர்- 37, ஆரல்வாய்மொழி- 6, கோழிப்போர்விளை- 18, இரணியல்- 9.6, அடையாமடை- 31, குருந்தன்கோடு- 7.6, முள்ளங்கினாவிளை- 18, ஆனைகிடங்கு- 17.2 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது. இதே போல அணை பகுதிகளில் பேச்சிப்பாறை- 16, பெருஞ்சாணி- 13.6, சிற்றார் 1- 10, சிற்றார் 2- 6.2, மாம்பழத்துறையாறு- 23 என்ற அளவில் மழை பதிவானது.

    தொடர் மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. குளங்களுக்கும் தண்ணீர் வருவதால் அவை வேகமாக நிரம்பி வருகின்றன.

    News