தேசிய மருத்துவ ஆணைய சட்டத்துக்கு எதிர்ப்பு: தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் 12 மணி நேர வேலை நிறுத்தம்
Views - 53 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்துக்கு இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் பல்வேறு மருத்துவர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் தங்களது எதிர்ப்பை காட்டும் விதமாக பல்வேறு போராட்டங்களும் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்திய மருத்துவர் சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக இந்திய மருத்துவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் ஜெயலால் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ உலகின் பன்முனை எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் ஜனநாயக மரபிற்கு எதிரானது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டால் எல்லா மாநிலங்களுக் கும் பிரதிநிதித்துவம் கிடைக் காது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தினால் ஏழை மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே இந்த முயற்சியை மத்திய அரசு கைவிடக்கோரி பல்வேறு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், உடன்பாடு ஏற்படவில்லை. எனவே தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எங்களது எதிர்ப்பை காட்டும் விதமாக இந்திய மருத்துவர் சங்கம் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, 28-ந் தேதி (அதாவது இன்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் 4,500 தனியார் ஆஸ்பத்திரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. இதே போல குமரி மாவட்டத்தில் 450 தனியார் ஆஸ்பத்திரிகளில் சுமார் 2 ஆயிரம் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இன்று புற நோயாளிகளுக்கு எந்த விதமான சிகிச்சைகளும் அளிக்கப்படாது. அதே சமயம் பிரசவம் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டால் சிகிச்சை மேற்கொள்ளப்படும். உள்நோயாளிகளுக்கு வழக்கம் போல சிகிச்சைகள் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இந்திய மருத்துவர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநில தலைவர் டாக்டர் ஜெயலால் பேசினார்.News