" Work hard, stay humble, and follow your heart."

குமரியில் இருந்து கேரளாவுக்கு இதுவரை 55 லாரிகளில் ரூ.1¼ கோடி நிவாரண பொருட்கள்

Views - 58     Likes - 0     Liked


  • நாகர்கோவில், 

    மழை வெள்ளத்தால் கேரள மாநில மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். உணவு, உடையின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர். அதேபோன்று குமரி மாவட்டத்தில் இருந்தும் கடந்த 18-ந் தேதி முதல் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

    குமரி கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பை தொடர்ந்து மக்கள் தாங்களாகவே முன்வந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகள், மாணவ- மாணவிகள் ஏராளமான நிவாரண பொருட்களை கொடுத்து வருகின்றனர்.

    அதாவது பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள், பால், மாவு, கிழங்கு வகைகள், பழ வகைகள், அரிசி, பருப்பு, சர்க்கரை, சேலை, பேன்ட், போர்வை, துண்டு, உள்ளாடைகள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிவாரண பொருட்களை தனித்தனியாக பிரித்து பார்சல் செய்யும் பணி நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் நடந்து வருகிறது.

    மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் பொருட்கள் அங்கு குவித்து வைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றை பார்சல் செய்யும் பணியில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் 5-வது நாளாக நேற்றும் ஏராளமான நிவாரண பொருட்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தன. பக்ரீத் பண்டிகை விடுமுறை தினமான நேற்றும் ஏராளமானோர் நிவாரணப் பொருட்களை கொண்டு வந்து கொடுத்தனர். நேற்று காலையில் இருந்து மாலை வரை லாரிகளில் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 5-வது நாளாக நேற்று வரை மொத்தம் 55 லாரிகளில் ரூ.1¼ கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் சாமியானா பந்தல் அமைத்து கேரளாவுக்கு அனுப்ப நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது. நேற்றும் இந்த நிவாரண சேகரிப்பு மையத்தில் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் ஏராளமானவர்களிடம் நிவாரணப் பொருட்களை சேகரித்தனர்.

    News